புலனாய்வு அறிக்கை: வெளி அரசியல் தலையீட்டால் இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை! -சபீர் மொஹமட்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலனாய்வு அறிக்கை: வெளி அரசியல் தலையீட்டால் இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை! -சபீர் மொஹமட்


ஜனநாயகமான தேர்தல் ஒன்றின் அடிப்படையில் எவரொருவர் தெரிவு செய்யப்படுகின்றார்களோ அவர்களுக்கு எந்தவொரு பாகுபாடுமின்றி தனது திறமையினை அடிப்படையாகக் கொண்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொருத்தமான பதவியொன்றை வகிப்பதற்கோ அல்லது சலுகைகளை பெற்றுக் கொள்ளவோ உரிமை உண்டு.


எனினும் இலங்கையில் துரதிதிஷ்டவசமாக தகுதியானவர்களுக்கு உரிய வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக இளைஞர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கான இழப்பை இலங்கையர்களாகிய நாங்கள் 1971 மற்றும் 1988 களில் நிகழ்ந்த இரு இளைஞர் புரட்சிகளிலும் 30 வருடங்களாக நீடித்த யுத்தத்தின் மூலம் இறந்த ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொண்டும் ஈடுசெய்துள்ளோம். 


$ads={2}


அப்படியிருக்க, மீண்டுமொருமுறை அவ்விதமான மோசமான நிலைமைகள் ஏற்படாதிருக்க வேண்டும் என்பதற்காக பல செயற்பாடுகள் கோடிக்கணக்கான நிதிச் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் வரிப்பணத்தில் அவ்விதமாக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்குள்ளும்  இனப் பன்மைத்துவத்தினை திட்மிட்டு மறந்தோ அல்லது மறைத்தோ ‘பாகுபாடுகள்’ இடம்பெறுகின்றமை அம்பலமாகியுள்ளது. 


சுபீட்சமான இலங்கையை கட்டியழுப்புவதையும், புதிய அரசியல் கலாசாரத்தினை மேம்படுத்துவதையும் அடியொற்றி கட்டமைக்கப்பட்டது தான் இளைஞர் பாராளுமன்றம். 

அதன் ஐந்தாவது அத்தியாயத்திற்கான தெரிவு நிறைவுக்கு வந்து செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்முறை, நாடளாவிய ரீதியில் தொகுதிவாரியாக நடைபெற்ற தேர்தல் மற்றும் பல்கலைக்கழகங்கள் மத்தியில் நடைபெற்ற தேர்தல் ஆகிய இரண்டிலுமே முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டவர்கள் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களே. 


தொகுதிவாரியாக் நடைபெற்ற தேர்தலில்,

 

01.அஹ்மத் சாதிக் - 870

02.மொஹமட் சபான் - 740

03.யோகராசா தனூசன் - 660 


என்றவாறே முடிவுகள் வெளியாகியிருந்தன. 


இதில் பிரதேச ரீதியிலான இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் பேருவளையில் இருந்து போட்டியிட்டு நாடளாவிய ரீதியில் அதிகூடிய வாக்குகளை பெற்று தற்போது பிரதி அமைச்சுப் பதவி ஒன்றை வகிக்கும் முதல்நிலை வெற்றி பெற்ற அஹமட் சாதிக் கருத்து தெரிவிக்கையில், 


“எந்தவிதமான அரசியல் பின்புலங்களும் இன்றி முற்றுமுழுதாக எனது நண்பர்களின் ஒத்துழைப்பில் நான் இளைஞர் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தேன். இம்முறை இளைஞர் பாராளுமன்றுக்குள் வழங்கப்பட்ட 50இற்கு மேற்பட்ட பதவிகளில் வெறுமனே ஒரு அமைச்சு பதவி மற்றும் 6 பிரதியமைச்சு பதவிகளுமே சிறுபான்மையினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை விகிதாசார அடிப்படையில் பார்த்தால் கூட சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கலாம். 


பொதுவாகவே எல்லா நாடுகளிலும் நிறம், இனம், மதம், மொழி மற்றும் அரசியல் ஆகிய விடயங்களில் பாரபட்சங்களை  நாம் அவதானிக்கின்றோம், இலங்கையிலும் இதனை காணமுடிகின்றது.


பாகுபாடுகள் அற்ற வளமானதொரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாங்கள் இளைஞர் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தோம். எனினும் இவ்வாறன இடங்களில் நாம் பாரபட்சத்தை உணர்வது மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. 


எனினும் வரவேற்கத்தக்க விடயம் யாதெனில், இதுவரை நாங்கள் மொழி ரீதியாக எந்த ஒரு  பாகுபாட்டையும் இளைஞர் பாராளுமன்றத்தில் அவதானிக்கவில்லை. எதிர் காலங்களிலும் மொழி  ரீதியில் சமத்துவம் வழங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருக்கின்றார்.


வளமான எதிர்காலம் என்ற மகுட வாசகத்தின் கீழ் இளைஞர் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பாரபட்சமற்ற சமமான இளைஞர் சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை கூறுவதற்கு முன்பே இளைஞர்கள் அரசியல் காரணங்களுக்காக ஒதுக்கப்படுகின்றார்கள். 

பொதுவாக இளைஞர் பாராளுமன்றத்தின் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுவது குறித்த இளைஞனின்  திறமை, இளைஞர் கழகங்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் பங்களிப்புகளை கருத்தில் கொண்டே ஆகும்.


எனினும் இம்முறை அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் போது மேற்கூறிய எதுவும் கருத்தில் கொள்ளப்படாமல் இருந்ததாக கம்பஹா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மல்~hன் கருதுகின்றார். அவர் “அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சரவை தெரிவு செய்யப்படுவது இளைஞர் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆகும். எனினும்  இந்த முறை மூன்று நேர்முகப் பயிற்சிகள் நடைபெற்று அதனடிப்படையிலேயே அமைச்சரவைகள் வழங்கப்பட்டன.


அந்த நேர்முக பரீட்சைகளுக்கு முகம் கொடுத்தபின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பலரும் நான் அமைச்சுப்பதவி ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார்கள். எனினும் இறுதியாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்ட போது அது முற்றுமுழுதாக மாற்றப்பட்டிருந்தது” என்றார்.


$ads={2}


இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றமானது இளைஞர் கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசியல் பின்புறங்களை கொண்ட இளைஞர்கள் ஆகிய மூன்று தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. 


தனது அனுபவங்களையும் அறிவையும் வளர்த்துக் கொண்டு ஏதோ ஒரு சேவையை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பங்கேற்பவர்களுக்கு மத்தியில் தங்கள் கட்சியை விளம்பரப்படுத்திக் கொள்ள பங்குபற்றுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். 


அத்துடன் இம்முறை இளைஞர் பாராளுமன்றத்திற்கு திறமையானவர்கள் மிகவும் சொற்பமான அளவிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். திறமையானவர்கள் பலரும் பணபலம் மற்றும் அரசியல் பலம் கொண்டவர்களிடம் தோல்வி அடைந்துள்ளார்கள். ஒரு சிலரைத்தவிர அதிகமானோர் தமக்குள்ள அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தியே இளைஞர் பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார்கள். 


அத்துடன் இம்முறை நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த பலரும் குறைந்தபட்சம் இலங்கை இளைஞர் கழக கூட்டமைப்பின் இளைஞர் உறுதிமொழியை கூட அறியாதவர்களாக வேறு பல இலாப நோக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு வாக்களித்திருந்தார்கள். 


கிராமப்புறங்களில் உள்ள கழகங்களின் இளைஞர் யுவதிகளை, சிலர் அச்சுறுத்தியதாக மல்~hன் தெரிவித்திருந்தார். நியமன நாள் முதல் தேர்தல் வாக்கெடுப்பு நாள் வரை பல சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்றுள்ளன. 


முக்கியமாக ஒரு சிலர் அரச உத்தியோகஸ்தர்கள் மூலம் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றதற்கான ஆதாரங்களை மல்~hன் தம்கைவசம் வைத்திருப்பதாக கூறினார்.

 

ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலானது உண்மையிலேயே சமதளம் ஒன்றில் நீதியான முறையில் நடைபெற்றதா என்பதும் கேள்விக்குறியே! ஏனென்றால் குறுகிய காலத்தில் இரண்டு பிரதானமான தேர்தல்களை நாங்கள் எதிர் கொண்டோம். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாக இருந்த பலரும் இம்முறை இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 


குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் 'இந்த இளைஞனுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தருவோம்” என்று பகிரங்கமாகவே மேடைகளில் தெரிவித்து வாக்குகளை சேகரித்தமைக்கான சாட்சியங்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. 


இளைஞர் பாராளுமன்ற பதவி நிலைகளில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பாக நான்காவது இளைஞர் நாடாளுமன்றத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் சுப்புன் விஜேரத்னேவிடம் வினவியபோது,


“இளைஞர் பாராளுமன்றமானது எப்போதுமே ஏதாவதொரு அரசியல் கட்சிக்கு பக்கச்சார்புடையதாக இருந்து வந்துள்ளதனை அவதானிக்க முடியும். ஆட்சியில் உள்ள அரசினை ஆட்சிக்கு கொண்டுவர பல வழிகளிலும் உதவிகளை வழங்கிய இளைஞர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக இளைஞர் பாராளுமன்றம் பயன்படுத்தப்படுகின்றது.

 

இளைஞர் பாராளுமன்றத்தை யதார்த்த அரசியல் அனுபவங்களை வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என நான் இளைஞர் பாராளுமன்றத்தின் பல அமர்வுகளிலும் பேசியுள்ளேன். ஏனெனில் கோலாகலமான நிகழ்ச்சிகளை விட அறிவு அணுகுமுறைகள் மற்றும் திறன்களை வளரக்கூடிய வேலைத்திட்டங்கள் இருந்தால் இந்த நிலைமை மாறும் என நான் நினைக்கின்றேன்.


மேலும் சுயாதீன தேர்தல் ஆணையத்தின் கீழ் இளைஞர் பாராளுமன்றத்தின் தேர்தல்கள் கண்காணிக்கப்பட்டு, இளைஞர் பாராளுமன்றத்தில் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். அத்துடன் தேசிய அளவில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது இளைஞர் பாராளுமன்றத்தின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இளைஞர் பாராளுமன்றத்தின் அமைச்சுக்களை தேசிய அமைச்சுக்களுடன் இணைப்பதன் மூலம் இளைஞர் பாராளுமன்றத்தின் தரத்தை மென்மேலும் உயர்த்த முடியும் என நான் நினைக்கின்றேன். 


தேசிய அரசியலில் உள்ள சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக விளங்குகின்ற பிழையான விடயங்கள் இளைஞர் பாராளுமன்ற செயற்பாடுகளிலும் காணப்பட்டால் அது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத தோல்வி ஆகும். தேசிய அரசியலுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதேவேளை தலைசிறந்த அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் உருவாக்குவதே இளைஞர் பாராளுமன்றத்தின் நோக்கம் என்பதனை செயற்திட்ட அலுவலர்கள் மற்றும் இளைஞர பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.


இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் போது, ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்த பலருக்கும் உயர் பதவிகள் பல வழங்கப்பட்டிருக்கின்றன. 


$ads={2}


இதுவரை  நடைபெற்றிருக்கின்றன சகல இளைஞர் பாராளுமன்றங்களிலும் அமைச்சுப் பதவிகளும் உயர் பதவிகளும் வழங்கப்படும் போது வெளி அரசியல் செல்வாக்குகள் இருந்துள்ளமை அனைவரும் அறிந்த ஒரு உண்மையே. 


• இளைஞர் பாராளுமன்றத்தை சுயாதீனமாக இயங்க வைப்பதற்கு ஏன் இளைஞர் சேவைகள் மன்றம்  முற்படுவதில்லை ?


• சட்டமியற்றும் செயற்பாட்டிற்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களால் பங்களிப்பு செய்ய முடியாதா?


• அவர்களுக்கு அந்த அதிகாரம் இதுவரை ஏன் வழங்கப்படவில்லை ?


இதுவரை காலமும் இளைஞர் பாராளுமன்றத்தை பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தியது இளைஞர் கழகங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களே ஆகும். அவர்கள் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடாக கிடைக்கின்ற திட்டங்களை செயல்படுத்தி கிராமப்புறங்களில் காணப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கு வலு சேர்த்தார்கள். 


இதுவே இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலை திட்டமாகவும் காணப்பட்டது. எனினும் இம்முறை இளைஞர் கழகங்களுக்கு மாறாக மேலும் இரு பிரிவினர்களை இந்த சபைக்குள் சேர்த்திருக்கிறார்கள். 


அதாவது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர் கழகங்களோ பல்கலைக்கழகங்களோ அல்லாத ஒரு சிலர். எனவே உண்மையிலேயே இவ்வாறு மேலும் இரு பிரிவினர்கள் சேர்க்கப்பட்ட நோக்கம் என்ன என்பதனை இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கோ அவர்களுக்கு வாக்களித்த இளைஞர்களுக்கோ தெரியாது?  ஆனால் அங்கும் மக்கள் வரிப்பணம் ‘அரசியல் இலாபத்துக்காக’ விரயமாகவுள்ளமை வெளிப்படுகின்றது. 


சபீர் மொஹமட்

(புலனாய்வு அறிக்கை)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.