காதி நீதிமன்றம் நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கு பொருத்தமற்றது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடும் வேளையில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் மதத்தை அடிப்படையாக கொண்டு சட்டம் செயற்படுத்தப்படுகின்றமை எவ்வகையில் நியாயமாகும்.
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற கொள்கை செயற்படுத்தப்பட வேண்டுமாயின் காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள வேளையில் காதி நீதிமன்றுக்கான தொழில் நியமனங்களுக்கான வெற்றிடத்துக்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை தவறான செயற்பாடாகும். காதி நீதிமன்றம், மதரஸா பாடசாலை, முஸ்லிம் விவாக சட்டம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பிரசாரமாகவே காணப்படுகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணாக காதி நீதிமன்றம் செயற்படுகிறது. ஒரு இனத்துக்கு மாத்திரம் நீதிமன்றம் செயற்படுவது பொதுச்சட்டம் அவசியமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
-இராஜதுரை ஹஷான்