ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம்: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அனைத்து விதிமுறைகள் பொருந்தும்!

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம்: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அனைத்து விதிமுறைகள் பொருந்தும்!


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் முன்வைப்பதை தடுக்கவில்லை என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான அனைத்து விதிமுறைகள் பொருந்தும் என  கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இதன் போது கூறியுள்ளார்,


பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்த புத்தகத்தை மேற்கோள்காட்டி கோட்டை நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக முன்னணி ஆங்கில நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.


எந்தவொரு சட்டத்திலும் விசேடமாக குறிப்பிடப்படாவிட்டால், எந்தவொரு குற்றம் தொடர்பான விசாரணையும் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விசாரணைகளுடன் தொடர்புடைய வாக்குமூலங்களை நீதவான் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post