உடல்களை தகனம் செய்யும் விவகாரம்; விஞ்ஞான ரீதியானவை மட்டும் தாக்கம் செலுத்தவில்லை!! -பேராசிரியர் நீலிகா மலவிகே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடல்களை தகனம் செய்யும் விவகாரம்; விஞ்ஞான ரீதியானவை மட்டும் தாக்கம் செலுத்தவில்லை!! -பேராசிரியர் நீலிகா மலவிகே

'உண்மையில் உடல்களை தகனம் செய்யும் விவகாரத்தில் தற்போது விஞ்ஞான ரீதியான விடயங்கள் மட்டும் தாக்கம் செலுத்தவில்லை, மாறாக இதில் மேலும் பல்வேறு விடயங்கள் சேர்ந்துள்ளன என்பது எனக்கு தோன்றுகின்றது' என ஜனாஸா நல்லடக்க கோரிக்கைக்கு சாதகமான சிபாரிசுகளை முன்வைத்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். 


அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுதான் யதார்த்தமும் உண்மையும் ஆகும்! என்னதான் விஞ்ஞான ரீதியான காரணங்களை சுகதார அமைச்சு முன்வைத்தாலும், நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதற்கமைய ஜனாஸா எரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் உடன் அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் கூறிவந்தாலும், நிஜத்தில் இதற்குப் பின்னால் வேறுபல காரண, காரியங்களும் இருக்கின்றன. 


$ads={2}

அவையே முஸ்லிம்களுக்கு சார்பான தீர்மானமொன்றுக்கு வருவதையிட்டும் ஆட்சியாளர்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்றது. 


மிகவும் வித்தியாசமானதும் நீண்டகால அடிப்படையிலானதுமான அரசியல் காய்நகர்த்தல்களுக்குள் ஜனாஸா எரிப்பு விவகாரமும் மாட்டிக் கொண்டுள்ளது. இனவாதமும், கடும்போக்கு சக்திகளின் அழுத்தமும் இரண்டாம் பட்சமானவை என்பதை நாம் விளங்கிக் கொள்ள காலம் எடுக்கலாம். 


கொரோனா வைரஸ் காரணமாக மரணிக்கும் அல்லது இறந்த பிறகு தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் உடல்களை நிலத்தில் புதைப்பது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களின் அறிக்கை கிடைத்தவுடன், தமக்கு ஆறுதலான ஒரு செய்தி வெளியாகும் என்று இலங்கை முஸ்லிம்களும் கத்தோலிக்கர்களும் எதிர்பார்த்திருந்தனர். 


முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் 


ஆனால், இரண்டு நிபுணர் குழுக்களும் தமது அறிக்கையை சமர்த்து ஒரு வாரமாகியும் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது சுகாதார அமைச்சோ குறிப்பாக முஸ்லிம் சமூகம் நிம்மதிப் பெருமூச்சு விடும் விதத்தில் ஒரு சிறு அறிவிப்பைத்தானும் வெளியிடவில்லை. அதற்கு மாற்றமாக, தொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் என்ற தொனியிலான கருத்துக்களை முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.


அவர்கள் குழு உக்குறிகளால் எதனைச் சொல்ல வருகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாதளவுக்கு இலங்கை மக்கள் முட்டாள்களல்லர். ஆனாலும், சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் இந்தப் போக்கு முஸ்லிம்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. பொதுஜன பெரமுணவை தீவிரமாக ஆதரித்த முஸ்லிம் மக்கள் விசனமடைந்துள்ளர். 


$ads={2}

ராஜபகஷகளுக்கு பக்கபலமாக இருந்த நீதியமைச்சர் அலி சப்ரி முதல் ஏ.எல்.எம். அதாவுல்லா வரையான எம்.பி.க்களைக் கூட இது எந்தளவுக்கு ஆத்திரமடையச் செய்துள்ளது என்பதற்கு அவர்களது உரைகளில் தொனிக்கின்றது. 


உடல்களை தமது சமய வழக்கத்தின்படி நல்லடக்கம் செய்யும் கோரிக்கை என்பது ஏனைய உரிமைக் கோரிக்கைகளை விட மாறுபட்டதும் விசேடமானதுமாகும். முஸ்லிமகள் தனியான ஆட்புலத்தை கேட்கவில்லை, ஆட்சி அதிகாரத்தைக் கேட்வில்லை. இஸ்லாமிய மார்க்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரவில்லை. 


ஏன் முஸ்லிம் பிரதேசங்கள் அதிகமாக முடக்கப்படுகின்றன? இலங்கையில் ஏன் கொரோனா தொற்றினால் முஸ்லிம்கள் அதிகமாக இறக்கின்றனர்? என்பதை எல்லாம் வித்தியாசமான கோணத்தில் ஆராயவும் இல்லை. உலக நாடுகள் எல்லாவற்றிலும் நடைமுறையில் உள்ள முறைமையின் படி ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையை வழங்குமாறே கோரி நிற்கின்றனர். 


வைத்தியர்களின் நிலைப்பாடு


சுகாதார நடைமுறைகளின் கீழ், உடல்களை அடக்கம் செய்வதால் பாதிப்பில்லை என்பதற்கான விஞ்ஞான விளக்கங்கள், தெளிவுபடுத்தல்கள் அளவுக்கதிகமாகவே முன்வைக்கப்பட்டு விட்டன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரி, இலங்கை மருத்துவ ஒன்றியம் என நாட்டில் இருக்கின்ற எல்லா விதமான அதிகாரபூர்வ மருத்துவ விஞ்ஞான துறை அமைப்புக்களும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு சாதகமான கருத்துக்களை அறிவித்து விட்டன. 


அரசாங்கமும் இனவாத சக்திகளும் முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்குவாரங்களைச் செய்து வருகின்ற காலப்பகுதியில், சிங்களப் பெரும்பான்மை கொண்ட நாட்டில், சிங்கள மருத்துவர்களோ துறைசார் நிபுணர்களோ சிங்கள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சிபாரிசுகளை செய்ய மாட்டார்கள். ஆனால் அதனையும் தாண்டி 'அடக்கலாம்' என்று கூறுகின்றார்கள் என்றால் அந்த விடயத்தில் அவர்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார்கள் என்பதே அர்த்தமாகும். 


எனவே, உண்மையில் இது விடயத்தில் நேர்மையுடன் செயற்பட அரசாங்கம் நினைத்தால், 'நல்லடக்கமும் செய்யலாம்' என்று அறிவிப்பதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாகும். ஆனால் அரசாங்கம் நல்லடக்கம் செய்யலாம் என்ற முடிவை அறிவிக்கவில்லை. மாறாக, 'இப்போதைக்கு எரிக்கும் தீர்மானமே தற்போது நடைமுறையில் உள்ளது' என்று கூறுகின்றமை, இப்போதைக்கு எரிப்பு தொடரும் என்பதையே உணர்த்தி நின்றது. இதுவே முஸ்லிம்களுக்கு பெரும் மனவெறுப்பையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 


பிழையான முன்மாதிரி


முன்னதாக, கடந்த 2020 ஏப்ரல் மாதம் சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையிலேயே முதலாவது முஸ்லிம் நபரின் ஜனாஸா எரிக்கப்பட்டது. அதன்பிறகு சில தினங்களுக்குள் அந்த சுற்றறிக்கையை திருத்திய சுகாதார அமைச்சு 'தகனம் மட்டும்' நடைமுறையை பிரகடனப்படுத்தியது. 


$ads={2}

இருப்பினும், அதன்பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பற்றிய பல புதிய புரிதல்கள் ஏற்பட்டன. உலகில் ஏனைய அனைத்து நாடுகளும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் பாதிப்பில்லை என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிப்படு;த்தி வருகின்றன. கொரோனா மரணம் பற்றி 85 ஆயிரம் ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள போதும், இறந்த உடலில் இருந்து நிலத்தடி ஊடாக வைரஸ் பரவியதாக ஒரு அறிக்கை கூட வெளியாகவில்லை. 


எனவே சுகாதார அமைச்சே ஓரிரு மாதங்களில் தமது விதிமுறைகளை சுயமாக மீள் பரிசீலனை செய்து மாற்றியமைத்திருக்க வேண்டும். அதுதான் உலக ஒழுங்கும் கூட. ஆனால் அப்படியான அபூர்வங்கள் இலங்கையில் நிகழவில்லை. மாறாக, முஸ்லிம்கள் இன்னுமின்னும் உணர்வு வயப்படுவதற்கும் கடும்போக்கு சக்திகள் கிளர்ந்தெழுவதற்கும் அதனூடாக நாட்டில் புதுப் பிரச்சினை ஒன்று உருவாவதற்குமே இடமளிக்கப்பட்டது. 


இந்தப் பின்னணியில், உடல்களை தகனம் செய்யும் நடைமுறையை மீளாய்வு செய்து, உடல்களை நல்லடக்கம் செய்யவும் அனுமதி அளிக்கலாமா என்பதைப் பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. ஆனால் அந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ள நிபுணர்கள் யார் என்பது பற்றி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. 


இந்த நிபுணர் குழுவின் அறிக்கை தாமதமாகிக் கொண்டே இருந்தது. அதாவது, இறந்த உடலில் வைரஸ் உயிர் வாழுமா என்பதையும் அது நிலத்தடி நீரோட்டத்தின் ஊடாக பரவுமா என்பதையும் ஆய்வு செய்வதற்கு சுமார் 7 மாதங்களை இக் குழு எடுத்துக் கொண்டது. ஏப்ரலில் இறந்த ஒருவரை புதைத்து விட்டு அவரது உடலில் இருந்து வைரஸ் பரவுகின்றதா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்கே, இக்காலம் போதுமானதாக இருந்திருக்கும். 


எனவே, இக்குழு அறிக்கை சமர்ப்பிப்பது தாமதமடைந்தமையும் மூடுமந்திர செயற்பாடுகளும் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தின. அத்துடன், அதில் உள்ளடங்கியுள்ள நிபுணர்கள், அவர்களது தகுதிகள் யார் என்பது பற்றிய விமர்சனங்களும் எழுந்தன. பாராளுமன்றத்திலும் இதுபற்றி பேசப்பட்டது, இதனையடுத்து, புதிதாக இன்னுமொரு நிபுணர் குழும் நியமிக்கப்பட்டது. 


நிபுணர்களின் அறிக்கை


இந்நிலையில், டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இரு நிபுணர் குழுக்களின் பரிந்துரை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே இவ் அறிக்கைகளுக்காக காத்திருந்தனர் என்ற அடிப்படையில்,  'அறிக்கை கிடைத்து விட்டது' என்ற ஒரு செய்தியையாவது அரசாங்கம் மக்களுக்கு உடனடியாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவ்விடயம் ரகசியமாகப் பேணப்பட்டது. 


இருப்பினும், தகவல் கசிந்தது. அதன்படி, பேராசிரியர் ஜெனீபர் பெரேரா தலைமையிலான (இரண்டாவது) நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும், அதில் கொரோனாவினால் மரணிக்கும் அல்லது மரணித்த பிறகு தொற்று உறுதிசெய்யப்படும் உடல்களை புதைக்கவும் முடியும் என்று சிபாரிசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  


மேலும், அதில் பல விடங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பொறுப்பளிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் மட்டுமே சடலங்களைக் கையாள வேண்டும். சடலங்களை 'எம்பம்' செய்யக்கூடாது. இரட்டை அடுக்கு பிரேதப்பையில் சடலத்தை இட்டு பிரேதப் பெட்டியில் வைப்பதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றி ஒரு மீற்றர் தூரத்தில் நின்று 4 பேர் மட்டும் 10 நிமிடங்களுக்குள் சடலத்தை பார்வையிடலாம். 


அடக்கம் செய்யும் இடத்தில் சுகாதார நடைமுறைகளின் கீழ் மதக் கிரியைகளை அதிகபட்சமாக 10 நிமிட நேரத்திற்குள் மேற்கொள்ளலாம். இந்த இறுதிக் கிரியைகள் அனைத்தும், சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ள நிபுணர் குழுவானது குறிப்பிட்ட அடக்கஸ்தலத்தின் அமைவிடம் பற்றியும் விதந்துரைத்துள்ளது என்ற விடயமும் தெரியவந்தது. 


இவ்வாறான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஒருசில பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கிய பின்னரே, அரசாங்கமானது இரண்டு நிபுணர் குழுக்களும் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன என்ற செய்தியை அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தியது. எவ்வாறிருப்பினும், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் (ஜனாஸா அடக்குவதற்கு பரிந்துரை எனும்) தகவல்கள் பொய்யானது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. 


அதன்பின்னர், இரண்டு குழுக்களும் ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதால் ஒரு முடிவுக்கு வரமுடியாதுள்ளதாகவும் இரு குழுக்களுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. 


$ads={2}

இரண்டு குழுக்களும் முரணான அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றன என்றால் அதில் ஏதாவது ஒரு குழு முஸ்லிம்களுக்கு சாதமான பரிந்துரையைச் செய்துள்ளது என்பதே அதன் மறைமுக அர்த்தமாகும். அந்த அறிக்கைகளின் உள்ளடக்கத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்தாமல் ஒற்றை வார்த்தையில் 'பொய்' எனக் கூறும் போதே, 'ஏதோ நடக்கப் போகின்றது' என்ற உணர்வுத் தூண்டல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விட்டது. 


குறையும் நம்பிக்கை


ஆயினும், முதலாவது குழுவில் போதிய திருப்தி இன்மையாலேயே இரண்டாவது நிபுணர் குழு நியமிக்கப்பட்டது என்பதாலும் அக்குழு அடக்கலாம் என்ற சிபாரிசை செய்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாலும். நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருந்தது 


வேறு ஒருதரப்பின் அஜந்தாவுக்காக செயற்படுகின்ற கடும்போக்கு இயக்கங்கள், 'கட்டணம் செலுத்தப்பட்ட' ரகமான இனவாதிகள், அரசியல் இலாபம் தேடுகின்ற முக்கியஸ்தர்கள் தவிர பொதுவாக சிங்கள மக்கள் ஜனாஸா நல்லடக்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். 


ஆகவே, இவ்விடயத்தில் இரட்டை வேடம் போடுவதை விடுத்து, விஞ்ஞான ரீதியான தடைகள் இல்லாதவிடத்து ஜனாஸாக்களை அடக்குவதற்கு இடமளிப்பது என்ற நிலைப்பாட்டில் உண்மையாகவே அரசாங்கம் இருக்கின்றது என்றால் அதற்கு மிகப் பொருத்தமான தருணம் இதுவாகும். எனவே அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியை திருத்தி வெளியிட்டு, உடல்களை அடக்க அனுமதி அளிப்பார்கள் என்று முஸ்லிம்கள் இன்னும் நம்பி எதிபார்த்துக் கொண்டிருக்கின்றனர். 


கொரோனா நோய் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மட்டுமன்றி, சில வைத்தியசாலைகளின் பல முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் நல்லடக்கத்திற்கான வாய்ப்புக்காக பிரேத அறைகளில் காத்துக் கிடக்கின்றன. சுகாதார அதிகாரிகளோடு மல்லுக்கட்டி, அவை எரிக்கப்படாமல் குடும்பத்தினர் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். 


ஆனால் அரசாங்கம் இதனை  அரசாங்கம் இன்னும் இழுத்தடிப்பதுடன், ஒரு இமாலயப் பிரச்சினையான இவ்விவகாரத்தை சர்வ சாதாரணமாகக் கையாள்கின்றது. இரண்டு நிபுணர் குழுக்களின் அறிக்கையையும் 96 சதவீதம் எழுத்தறிவைக் கொண்ட இலங்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தாமல், அதில் தமக்கு சாதகமான நிலைப்பாட்டிலுள்ள குழுவின் அறிக்கைகக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாங்கில் 'நிபுணர் குழு சடலங்களை எரிப்பதற்கே சிபாரிசு செய்துள்ளது' என்று சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்திலேயே வந்து கூறிவிட்டுச் செல்கின்றார். 


இவற்றையெல்லாம் பார்க்கும் போது, முஸ்லிம்களையும் இந்நாட்டு மக்களையும் தமது தேவைகளுக்காக அரசாங்கமோ அதற்குப் பின்னாலிருந்து இயக்கும் குழுக்களோ பேய்க்காட்ட முயற்சிக்கின்றதா என்ற வலுவான கேள்வி எழுவதை தடுக்க முடியாதிருக்கின்றது. இந்த கேள்விக்கு விடைதேடிப் போனால் இதுவரை நாம் கேள்விப்பட்டிருராத இனவாதத்தையும், ராஜதந்திரத்தையும், அரசியலையும் விஞ்சிய ஏதோவொன்று இருப்பது புலனாகலாம்.


-ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 10.01.2021)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.