தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் இணைந்து அரசியல் கட்சி? சுமந்திரன் அசாத் சாலி சந்திப்பு!

தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் இணைந்து அரசியல் கட்சி? சுமந்திரன் அசாத் சாலி சந்திப்பு!


அரசியல் ரீதியாக இலங்கையில் பல்வேறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இப்பின்னணியில் இன்றைய தினம் (26) தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியுடன் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர், இரு சமூகங்களும் ஒன்றிணைந்து தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து பயணிக்க வேண்டியது அவசியம் எனவும் அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.  


அத்துடன் ஜனாஸா அடக்கம் தொடர்பில் குரல்கொடுத்த சுமந்திரன், கஜேந்திரன் சாணக்கியம் உட்பட அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, முன்னைய காலங்களில் சுமந்திரன், மனோ கணேஷன், விக்ரமபாகு கருணாரட்ன உட்பட தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாராந்த செய்தியாளர்கள் சந்திப்புகளை நடாத்தி வந்ததோடு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி வந்ததாகவும் இப்போது அதனை மீண்டும் புதுப்பித்து, இரு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்து அரசியல் ரீதியிலான ஒற்றுமையுடன் ஒரேயணியாக தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயாராக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். 


இப்பின்ணியில் மேலும் பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர்  விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


-அஸீம் கிலாப்தீன்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post