29 நாட்களுக்கு பின்னரும் சடலத்தில் கொரோனா? முட்டாள்தனமான கருத்து! விளக்குகிறார் மருத்துவர் அர்ஷட் அஹ்மட்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

29 நாட்களுக்கு பின்னரும் சடலத்தில் கொரோனா? முட்டாள்தனமான கருத்து! விளக்குகிறார் மருத்துவர் அர்ஷட் அஹ்மட்

இறந்த உடல்களில் 29 நாட்களில் பின்னரும் கொரோனா PCR ரிப்போர்ட் பொஸிடிவாக வந்திருப்பதாக வைத்திய சங்கத்து ஆட்கள் சொல்வதாக ஒரு செய்தி  உலா வரத் தொடங்கியிருக்கிறது. இறந்த உடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா பரவும் என்ற வடி கட்டிய முட்டாள்தனமான கருத்திற்கு ஆதரவாக இந்த விஷயத்தை சிலர் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். விஞ்ஞான அடிப்படைகள் தெரியாத பொது மக்களை எப்படி குழப்பலாம் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல உதாரணம். 


பிஸிஆர் டெஸ்ட் என்பது வைரஸின் RNA ஐ கண்டுபிடிக்க செய்யப்படும் ஒரு பரிசோதனையே அன்றி, அது முழு வைரஸையோ அல்லது உயிரோடு இருக்கின்ற வைரஸையோ கண்டுபிடிப்பதற்காக செய்யப்படுகின்ற ‌ஒரு பரிசோதனை அல்ல என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை. வைரசின் RNA என்பது காரின் என்ஜின் போன்றது. PCR ‌என்பது எஞ்சினை பார்த்து கார் இருக்கிறதா? அது என்ன கார்  என்பதை தேடிப்பார்ப்பது போன்றது. எஞ்சின் இருக்கிறது என்பதற்காக காரும்‌ இருக்கிறது என்றோ, இருக்கிற அந்த எஞ்சின் வேலை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறது என்றோ யாருக்கும் சொல்ல முடியாது. கார் இல்லாமலும் கழட்டிய நிலையில் எஞ்சின் இருக்கலாம். அது போல காருக்குள் இருந்தாலும் சிலவேளை அது பழுதடைந்த எஞ்சினாகவும் இருக்கலாம். எஞ்சின் வேலை செய்கிறாதா என்பதை அறிவதற்கு வேறு பரிசோதனைகள், நுட்பங்கள் தேவைப்படும். சும்மா கண்ணால் பார்த்து விட்டு எஞ்சின் வேலை செய்கிறது என்று சொல்ல முடியாது. இயக்கிப் பார்க்க வேண்டும். அது போலத் தான் பிஸிஆர் பொசிடிவ் என்பதற்காக வைரஸ் இருக்கிறது, என்றோ வைரஸ் உயிரோடு இருக்கிறது என்றோ யாராலும் சொல்ல முடியாது. அந்த வைரஸ் இறந்த வைரஸாகவோ, அல்லது சிதைவடைந்து வரும் வைரஸாகவோ கூட இருக்க முடியும். ஆனால் நிச்சயமாக அது உயிருள்ள வைரஸாக அல்லது தொற்றக் கூடிய வைரஸக இருக்க முடியாது என்பதை உறுதியாக கூற முடியும். ஏனெனில்  இறந்த உடல்களில் வைரஸ் உயிருடன் இருப்பற்கு சாத்தியமே இல்லை என்பது தான் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாக இருக்கிறது. கொரோனா வைரஸை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பரிசோதனைகளுக்கு அனுப்புவதற்காகவே தயாரிக்கப்பட்ட transport mediumகளில் கூட 37°C இல் இரண்டு நாட்களுக்கு மேல் இந்த வைரஸ் உயிரோடு இருக்காது ,22°C இல் கூட 7 நாட்களுக்கு மேல் உயிரோடு இருக்காது. நிலமை இப்படி இருக்கும் போது எப்படி இறந்த உடலில் கொரோனா உயிரோடு இருக்கும்? அப்படி உயிரோடு இருக்கும் என்றால் ஏன்  இவ்வளவு செலவு செய்து ட்ராண்ஸ்போட் மீடியம் செய்ய வேண்டும்? இறந்த உடலின் ஒரு துண்டே போதுமே ஃபண்ணி பேலொஸ்..!


$ads={2}

வைரஸ் உயிரோடு தான் இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால் அதை நாங்கள் வைரஸ் கல்ச்சர் மீடியாவில் வளர்த்து எடுக்க வேண்டும். அது வளர்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி அந்த வைரஸ் வளர்ந்து பெருகினால் அது உயிரோடு இருக்கிறது என்பது அர்த்தம். அது வளரவில்லை என்றால் அந்த வைரஸ் உயிரோடு இல்லை, இறந்து போயிருக்கிறது என்பது அர்த்தம். என்ன செய்ய!!!  இப்படி வைரஸை உயிரோடு வளர்ப்பதற்கான கல்ச்சர் மீடியாக்களை‌ கொண்ட பயோ சேப்டி லெவல்4 தர நிர்ணயம் பெற்ற ஒரு ஆய்வு கூடம் கூட  இலங்கை‌ திரு நாட்டிலே இல்லை‌‌யே!  இருந்தா மட்டும் கிழிச்சிருப்பாக லா..


கிட்டத்தட்ட 6000 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட எகிப்திய மம்மிகளிடம், அதுபோல உறைபனியில் அகப்பட்ட உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை திரவங்களில் கூட நிறையத் தடவைகள், ஆய்வுகளின் போது PCR ரிப்போர்ட் பொஸிடிவாக தான் வந்து இருக்கின்றன. அவைகளை வைத்துத்தான் அந்த காலங்களில் என்னென்ன நோய்கள் வந்திருந்திருக்கின்றன என்பதை விஞ்ஞானிகளால் கணிக்கக்கூடியதாகவும் இருநதிருக்கிறது. 1918 ம் ஆண்டில் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் புளூ கூட கோரோனா வகை சார்ஸ் வைரஸ்களால் தான் வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டதும் இவ்வாறான பிசி ஆர்களை வைத்து தான். அப்படி PCR பொஸிடிவான மம்மிகளில் உடல்களில் இருந்து நோய் பரவும் என்றால் எப்போதோ நோய்கள் பரவி இருக்க வேண்டுமே?. அப்படி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.


ஸ்பானிஷ் புளு பற்றி அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=560947257965788&id=394132221313960 


ஆகவே இறந்த உடல்களில் ‌பிசி ஆர் பொசிடிவ் என்பதால் அதை  வைத்துக்கொண்டு, அதுவும் ஐஸ் பெட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்ட உடலிலே( குளிர் நிலையில் RNA பாதுகாப்பாக சிதைவடையாமல் இருக்கும் அதற்காகவே தான் கொவிட் mRNA வக்சீனையும் குளிர் நிலையில் பாதுகாத்து வைக்கிறார்கள்) PCR பொசிடிவாக வந்ததை வைத்துக்கொண்டு இறந்த உடல்களில் இருந்து கொரோனா பரவும் என்று சொல்வது முட்டாள்தனமானது, மடத்தனமானது. இதற்கும் விஞ்ஞானத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.


Dr PM Arshath Ahamed MBBS MD PAED

குழந்தை நல மருத்துவர்

ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று


பிற்குறிப்பு: கராஜ் ஒன்றிலே இனி பாவிக்கவே முடியாது என்று  தூக்கி வீசப்பட்ட எஞ்சின் ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு நான் பென்ஸ் கார் வாங்கி இருக்கிறேன், அது‌ மணிக்கு ‌200Km/H ஓடும் என்று சொல்லிக் கொண்டு ‌திரிவதை போன்றது தான் இவர்களின் இந்த வாதம். உடைந்த எஞ்சினை பார்த்து பென்ஸ் கார் என்று நம்பும் ஒரு கூட்டம் ஒரு நாட்டில் இருக்கும் என்றால் அந்தோ பரிதாபம் அவர்கள் இதற்கு முதல் பென்ஸ் காரை கண்டிருக்கமாட்டார்கள் என்பது தான் வெளிப்படை உண்மை. உங்களுக்கு பாணி தான் சரிவரும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.