“ஜனாஸா தகனம் செய்யப்படுவது முழுமையாக மாற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும், அந்த நாள் வெகு விரைவில் மலரும் என நம்புகின்றோம்” - YMMA தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி

“ஜனாஸா தகனம் செய்யப்படுவது முழுமையாக மாற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும், அந்த நாள் வெகு விரைவில் மலரும் என நம்புகின்றோம்” - YMMA தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி


கொவிட் -19 வைரஸ் தொற்றற்ற நாடாக இலங்கை விரைவில் மாறவேண்டும் என்பதே, வை.எம்.எம்.ஏ. யின் பிரதான எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு மீண்டும் மலர, அனைத்து மக்களும் இன, மத பேதமின்றி கை கோர்க்க முன்வர வேண்டும் என, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி அறைகூவல் விடுத்தார்.

"தடைகளை உடைப்போம் - பாலம் அமைப்போம்" எனும் தலைப்பில், கண்டி சமய மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சமாதான ஒன்றுகூடல் மற்றும் ஊடகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


$ads={2}


அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாமல், தகனம் செய்வது தொடர்பில் வை.எம்.எம்.ஏ., அன்று முதல் இன்று வரை பல்வேறு மட்டத்திலிருந்தும் குரல் எழுப்பிக்கொண்டே வந்துள்ளது. கொரோனா முதலாவது அலையின்போது, நீர்கொழும்பு பலஹத்துறையில் முதலாவதாக மரணமான ஜனாஸாவைக் கூட அடக்கம் செய்யாமல் தகனம் செய்த நாள் முதல் வை.எம்.எம்.ஏ. போராடி வந்தது. இது தொடர்பில் பல்வேறு சங்கங்களிடம் கோரிக்கை விடுத்ததும் வை.எம்.எம்.ஏ. யாகும்.

அத்துடன், இவ்வாறான ஜனாஸாக்களை, மாலைதீவுக்குக் கொண்டுபோய் அடக்கம் செய்யாமல், அவைகள் நமது நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பில், ஊடகங்கள் ஊடாகவும் குரல் கொடுத்தது. இதனை மாலைதீவு அரசும் ஏற்று, அதிலிருந்து விலகிக்கொண்டது. இதற்காக, மாலைதீவு ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நாம் இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, எவ்வித பாதிப்புமின்றி மிகப் பாதுகாப்பாக கொங்கிறீட் இடப்பட்ட மண்ணறைகளில் அடக்கம் செய்வதற்கான பொறுப்பையும் வை.எம்.எம்.ஏ. ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதற்கான கோரிக்கையையும் சுகாதாரத் தரப்பினரிடம் முன் வைத்துள்ளது. இதற்கான தகுந்த பதில் எமக்குக் கிடைக்கும் என நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளோம். இதேவேளை, சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தம் காரணமாக ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதை, பிரதமர் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம். தகனம் செய்யப்படுவது முழுமையாக மாற்றப்பட வேண்டும். அதன் முடிவுகள் நல்லதாக அமைய வேண்டும். இதனையே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்பார்துக் காத்து நிற்கின்றது. அந்த நல்ல நாள் வெகு விரைவில் மலரும் என நம்புகின்றோம்.

எமது இப்போராட்டத்திற்கு அதிகமான பெரும்பான்மை அமைப்புக்கள், குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு உந்துசக்தி அளித்து வருவதையும் பாராட்டுகின்றேன் என்றார்.

இந்நிகழ்வில், என்.எம். நிப்ராஸ் (ANGS), டொக்டர் நிரோஷன் ஏக்கநாயக்க (சமாதானம்), விரன்ஞன் டயஸ் (மனிதவள ஆணைக்குழு), எஸ். கொஹோபன்ஜ் (NPC) ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

-ஐ. ஏ. காதிர் கான்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post