
“உஸ்ம தெனதுரு” 20 இலட்சம் மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ், காசல்ரீ நீர்தேக்கப்பகுதிக்கு அண்மித்த லெதண்டி தோட்டத்தில், மரக் கன்றுகளை நடும் விசேட நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.
MCC உடன்படிக்கை இனி கைச்சாத்திடப்படாது. அதிலிருந்து அமெரிக்காவும் விலகிவிட்டது. MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது எனக்கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த கொள்கை தொடர்ந்தும் பின்பற்றப்படும். வேறு எந்த வடிவில், வேறு பெயரில் வந்தால் கூட ஏற்பதற்கு தயாரில்லை.
எது எப்படியிருந்தாலும் அமெரிக்காவுடனான எமது இராஜதந்திர உறவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அது அவ்வாறே தொடரும். அமெரிக்காவும் இதனை அறிவித்துள்ளது.
நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மாத்திரமே இந்த அரசாங்கம் செய்யும். தீங்கு விளைவிக்ககூடிய எதனையும் செய்யாது.
இதேவேளை, கொரோனா வைரஸ் முழு உலகுக்கும் சவாலாக அமைந்துள்ளது. நாம் முதலாவது அலையை கட்டுப்படுத்தினோம். 2ஆவது அலையையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கினால் 2ஆவது அலையையும் இலகுவில் கட்டுப்படுத்தலாம். எந்தவொரு முயற்சியையும் நாம் கைவிடவில்லை என்றார்.