
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய உணவு விநியோக பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கடந்த திங்கட்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவருடன் பணியாற்றியவர்களுக்கு முன்னெடுக்கபட்ட PCR பரிசோதனைகளில் மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு விநியோக பிரிவில் பணியாற்றும் மற்றைய ஊழியர்களுக்கு பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அறிவிக்க்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு விநியோக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு விநியோக நடவடிக்கைகள் முன்னடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விநியோகத்தின் போது, தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்படுமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுத்திகரிப்பு பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான குறித்த பெண் சிகிச்சைகளுக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணுடன் தொடர்புடைய மேலும் 10 பேர் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
