
கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா வைரஸால் நிகழும் உயிரிழப்புகளில் பிரேசில் உலகளவில் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்ததையடுத்து பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185,650 ஆக உயர்ந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரேசிலில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமென்றும், அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படாதென்றும் பிரேசிலின் ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.
உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி ஏற்கெனவே கூறியதால் உலக சுகாதார ஸ்தாபனத்தாலும், ஏனைய அமைப்புக்ளாலும் கடும் விமர்சனத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்வில் பங்கேற்ற பிரேஸில் ஜனாதிபதிக்கு கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்ட அவர் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை தொடர்ந்து எடுத்து வந்தார்.
இதற்கிடையில், பைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் அதை போட்டுக் கொள்ளப் போவதில்லையென்பது அது தனது தனிப்பட்ட உரிமை என பிரேசில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
பைசர் நிறுவனத்துடனான பிரேசிலின் ஒப்பந்தத்தில் (பிரேசில் அரசாங்கம் போட்டுள்ள ஒப்பந்தம்) மிகவும் தெளிவாக உள்ளது. தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் (பிரேசில் அரசாங்கம்) எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது.
மேலும் நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை; நீங்கள் மனித நேயமற்றவராக மாறினாலோ, ஒரு பெண்ணுக்கு தாடி வளரத் தொடங்கினாலோ அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காதென்று பிரேசில் ஜனாதிபதி மேற்கோள்காட்டி கூறியுள்ளார்.
இதனால் பிரேசில் நாட்டு மக்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏதேனும் பக்க விளைவுகள் வந்துவிட்டால் என்ன செய்வது? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
-ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்