கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மருந்து அல்லது தடுப்பூசிகளை கண்மூடித்தனமாக பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கொரோனா வைரஸை அழிப்பதற்காக மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படாத மருந்து வகைகள் அல்லது தடுப்பூசிகளை பயன்படுத்தவேண்டாம்.
$ads={2}
மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படாத மருந்து வகைகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதால், பாரிய கைசேதத்தை ஏற்படுத்தலாம். அதனால் இதுதொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும்.
அத்துடன் இவ்வாறான மருந்து அல்லது தடுப்பூசிகளை பயன்படுத்தும்போது அதனூடாக பிரச்சினைகள் மற்றும் வேறு பாதிப்புக்கள் ஏற்படாது என்பதை சரியான முறையிலான மதிப்பீட்டுடன் மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் உலக நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒக்ஸ்பர்ட், பயிஸர், ஸ்புட்னிக் மற்றும் சிநொவெக் என்ற நான்கு வகை தடுப்பூசி தொடர்பாகவும் கவனம் செலுத்தி இருக்கின்றோம்.
மேலும் கொவிட் தொற்றுக்காக பொருத்தமான தடுப்பூசி ஒன்றை உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரை செய்யப்பட்ட பின்னர், அதனை முதல் தரத்திலே நாட்டுக்கு கொண்டுவந்து மக்களுக்கு வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்புக்காக எடுக்கமுடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.
அதன் பிரகாரம் கொரோனாவிற்கு உகந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்தததும் அதனை விரைவாக பெற்றுக்கொண்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்றார்.