சிறைக் கைதிகளின் உயிரிழப்பு நாட்டிற்கு பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! ரவூப் ஹக்கீம் கடும் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைக் கைதிகளின் உயிரிழப்பு நாட்டிற்கு பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! ரவூப் ஹக்கீம் கடும் எச்சரிக்கை!

சிறைச்சாலைகளிலும் பொலிஸ் நிலையங்களிலும் தடுப்புக்காவலிலிருக்கும் கைதிகளின் உயிரிழப்பு மிகவும் பாரதூரமான விடயமாகும். சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை இதனால் நாம் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பாதுகாப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கான 2021 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


சிறைச்சாலைகளிலும், பொலிஸ் பாதுகாப்பிலும் உள்ளவர்களின் உயிர் இழப்புக்கள் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த விடயம் பற்றி உரிய கவனம் செலுத்தி நன்கு பரீசிலிக்கப்பட வேண்டும்.


குற்றவியல் சட்டக் கோவையின் 272ஆவது உறுப்புரையின்படி, சிறைச்சாலைகளில் சம்பவிக்கும் எந்தவொரு உயிரிழப்பு சம்பந்தமாகவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மஹர சிறைச்சாலை சம்பவத்தில் துப்பாக்கி பிரயேகத்தினால் எவருமே இறக்கவில்லை என்று கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


இவற்றின் போது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு முறையான மரண விசாரணையும் மேற்கொள்ளப்படுவதனூடாக அது பற்றி தீர்மானிக்கப்பட வேண்டும்.


இவ்வாறான விசாரணைகள் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக இருக்கவேண்டும். நீதியமைச்சர் அலி சப்ரி, நீதிபதி குசலா சரோஜினியின் தலைமையில் இந்த சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக இந்தச் சபையில் குறிப்பிட்டார். அந்த விசாரணைக் குழுவில் என்னோடு சட்டக் கல்வி பயின்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி. சில்வாவும் இடம்பெற்றிருக்கின்றார்.


அந்த ஆணைக்குழுவிற்கு பொது மக்களும் வந்து சாட்சியமளிக்கக் கூடிய விதத்தில் பொதுவான இடமொன்றில் கூடவேண்டும். அதன் விசாரணைகளின் பயனாக உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்கள் நடந்த விடயம் தொடர்பில் உரிய விளக்கத்தையும், தெளிவையும் பெறக் கூடியதாக இருக்க வேண்டும்.


இந்த விசாரணையினூடாக திட்டவட்டமான தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு முன்னரும் இவ்வாறான பல்வேறு பாரதூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. பாதுகாப்புக்கு கீழ் உள்ளவர்கள் இறப்புக்கு உள்ளாகும் அனேக சம்பவங்கள் முன்னரும் பதிவாகியுள்ள நிலையில் இவற்றை இலோசானவையாக கருதிவிட முடியாது.


அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவிற்குப் புறம்பாக, சுதந்திரமான அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சிறைச்சாலைகளுக்குச் சென்று தனியாக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறான பொறிமுறையினால் உண்மையை கண்டறியவும் சரியான காரணத்தை உறுதிப்படுத்தவும் முடியும்.


மன்னார் மாவட்டத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மேலும் தாமதமின்றி மீள ஒப்படைக்கப்பட வேண்டும்


முழுமையாக சிலாவத்துறை நகரம் இந்தக் கடற்படை முகாமிற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. பெறுமதியான அக்காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் உள்ளன. அவற்றிற்கான அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


நானும், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானும் இது பற்றி முன்னைய பாதுகாப்பு செயலாளருடன் கதைத்தோம்.


நீண்ட காலமாகியும் இந்தப் பிரச்சினைகள் இதுவரை தீர்வு காணப்படவில்லை. பிரஸ்தாப கடற்படை முகாமை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு, அங்கு மீளக் குடியேற்றியுள்ள பொது மக்களின் பயன்பாட்டிற்காக இக்காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


$ads={2}

அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் அமர்ந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சினதும், உள்நாட்டு அமைச்சினதும் செயலாளர் மேஜர் கமல் குணரட்னவின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வருகின்றேன்.


அத்துடன் மொறக்கொட்டான்சேனை இராணுவ ஆயுதப்படை முகாமை ஏறாவூர் புன்னக் குடா பிரதேசத்திற்கு இடமாற்ற செய்யப்பட முயற்சிக்கப்படுகின்றது.

அவ்வாறு செய்ய வேண்டாம். புன்னக் குடாவிலுள்ள பிரஸ்தாப நிலமானது காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உரியது. முதலீட்டுச் சபை வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அக்காணியினால் ஏறாவூர் பிரதேச மக்கள் நன்மையடைவார்கள். இதுபற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.


இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு புறம்பாக கட்டடங்கள் ஒதுக்கப்பட்டு அப்பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அத்துடன், இந்த முகாம் இடமாற்றத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட்டுள்ளதாக அறிகின்றோம்.


ஏறாவூர் பிரதேசத்தில் பொலிஸ் நிலையமொன்றை நிறுவுவதற்காக சந்திக்கு அருகில் இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அண்மையில் அமைந்துள்ள அலிகார் தேசிய பாடசாலைக்கு அந்த இடத்தை வழங்குமாறு அங்குள்ள மக்களின் வேண்டுகோளின்படி அது பற்றி பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தோம். மயிலன்பாவளி பிரதேசத்தில் தெங்கு அபிவிருத்தி சபைக்குரிய இடமொன்றை அதற்காக பயன்படுத்தலாம் என நாங்கள் ஆலோசனை தெரிவித்திருந்தோம்.


இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவும் அதற்கு இணங்கியிருந்தார். ஆகையால், அலிகார் தேசியப் பாடசாலை அருகில் உள்ள இடம் பொலிஸ் நிலையத்திற்கு பொருத்தமற்றது என்பதால் குறித்த காணியை பாடசாலையின் அபிவிருத்திற்காகவும், விஸ்தரிப்பிற்காகவும் அந்த பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். அது தொடர்பிலும் முன்னர் எடுத்த நடவடிக்கைகள் அடங்கிய கோவை பொலிஸ் மா அதிபரிடம் உள்ளது.


பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஒரு முக்கிய விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது, பொலிஸார் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்கொன்றை முன்கொண்டு செல்லும் போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உதவியின்றி அவர்களால் சரிவர நடாத்திச் செல்ல முடியாது. பொலிஸ் அதிகாரிகளை இதற்காக பயிற்றுவிப்பதற்கும் காலம் தேவைப்படும். பொலிஸ் சார்ஜன்ட்மார் குறிப்பாக நீதவான் நீதிமன்றில் இவ்வாறாக வழக்குகளை நெறிப்படுத்துகின்றனர்.


அதைவிட, தற்போதைய பொலிஸ் மா அதிபரும் கூட, உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்து கொண்டவர் என்ற படியால் சட்டத்துறையில் பத்து வருட அனுபவம் பெற்ற சட்டத்தரணிகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக நேரடியாக இணைத்து கொள்வதன் பயனாக ஒவ்வொரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவிற்கும் நியமிப்பதன் காரணமாக வழக்குகளை சிறப்பாக முன்னெடுத்து அவற்றை விரைவில் முடித்து வைப்பதற்கும் உதவியாக இருக்கும். குற்றவியல் சட்டத்துறையில் பத்தாண்டு அனுபவம் உள்ள சட்டத்தரணிகளை இவ்வாறு நியமிப்பதனால் இதனை நிவர்த்தி செய்யலாம்.


மஹர சிறைச்சாலை சம்பவம் கூட, அங்கு ஏராளமான கைதிகளின் வழக்குகள் தயார்படுத்தப்படாத நிலையில், கொரொனா தொற்றினால் நீதிமன்றங்கள் கூட முடியாதது போன்ற காரணங்களால் தாமதமாகியிருக்கின்றது. அனுபவம் குறைந்த பொலிஸ் அதிகாரிகள் வழக்குகளை நெறிப்படுத்தப்படாத காரணத்தினாலும் அவை தாமதமடைந்துள்ளன. நாட்டில் 23,000 ரிமாண்ட் கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். ஆகையால், இவ்விடயத்தை கவனத்தை எடுங்கள்.


கொரொனா காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை காரணங்களை தெரிவிக்காது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை தவறான நடைமுறையாகும்.


$ads={2}

இது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதனால் நாங்கள் எல்லோரும் பெரிதும் ஏமாற்றமடைந்து இருக்கின்றோம். இவ்வாறான அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும் சட்டபூர்வமான நியாயாதிக்கத்தை கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட வழக்காளிகள் பெரிதும் கவலையடைந்துள்ளோம்.


இதேபோன்று தான் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களும் கூட, உயர் நீதிமன்றத்தில் பத்து நாட்களாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் உரிய காரணங்கள் காட்டப்படாமல் நிராகரிக்கப்பட்டன.


வழக்குகளின் இறுதியில் அவற்றை காரணங்களின்றி நிராகரிப்பது தவிர்க்கப்பட வேண்டும். இதனை பிரதம நீதியரசர் அறியாதிருந்திருக்க முடியாது என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.