மினுவாங்கொடையில் உள்ள பிரெண்டிக்ஸ் ஶ்ரீலங்கா பிரைவேட் லிமிட்டெட் ஆடைத்தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக பணியாற்றும் 39 வயதான பி. ரத்நாயக்க மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் சமூகத்தில் அந்த வைரஸின் தொற்று பரவி இரு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன.
கட்டுப்படுத்திவிட்டதாக அரசாங்கம் தொடர்ச்சியாக பெருமை பேசிக்கொண்டிருந்தாலும் வைரஸ் பரவல் நெருக்கடியான ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரு கொத்தணியில் வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் நபராக இரத்னாயக்க இருந்தாலும் அவர்தான் கொத்தணியின் தோற்றுவாய் அல்ல என்று சுகாதார அதிகாரிகள் கூறினார்கள். நவம்பர் 8 அளவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்களைக் கொண்ட கொத்தணியாக அது மாறியிருந்தது.
ரத்நாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக கண்டுபிடிக்கப்பட்ட போது சமூகத்தில் அவர் அமதிக்கப்பட்டு அவதூறுக்குள்ளானார். அவரது ஊழியர்களும் அவரை பழித்துரைத்தார்கள். தொற்றுநோய் பரவலுக்கு அவர்தான் காரணமென்று குற்றம்சாட்டப்பட்டது.
“ஒரு சமூகப் பிணிப் போன்று என்னை நடத்தினார்கள்” என்று அவர் கவலையுடன் கூறினார். “நான் கொரோனா தொற்று நோயினால் அல்ல, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது போன்று உணர்ந்தேன்” என்று ‘வைஸ்’ தளத்துக்கு ரத்நாயக்க கூறினார்.
தொற்று நோயின் தோற்றுவாயைக் கண்டறிய விசாரணைகள் கூட நடைபெற்றுக் கொண்டிருக்கின்போதிலும், ரத்நாயக்க முதல் முதல் தொற்றுக்கு இலக்காகியவராக நோக்கப்பட்டார்.
$ads={2}
‘வைஸ் தளத்துக்குடன் ரத்நாயக்க பேசியபோது அவர் தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சைப்பெற்று வந்தார். கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரதான மருத்துவ பராமரிப்பு நிலையமாக அது விளங்குகிறது.
நான்கு பிள்ளைகளின் தாயாரான ரத்நாயக்கவுக்கு இலங்கையில் மினுவாங்கொடை கொத்தணியின் சர்ச்சையின் மையமாக இருக்கும் பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக 9 வருடங்களுக்கும் அதிகமான கால அனுபவம் இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் இருந்து அந்த தொழிற்சாலையின் 1460 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
கொத்தணி தோன்றிய பிறகு இந்த ஆடைத்தொழிற்சாலை அமைந்திருக்கும் கம்பஹா மாவட்டம் இலங்கையின் ஏனைய பல பகுதிகளைப் போன்று ஊரடங்கின் கீழ் இருக்கிறது.
ஆடைத்தொழிற்சாலையில் செப்டெம்பர் 28 தான் சுகவீனமுற்றதாகவும் ஏனைய பல ஊழியர்களுக்கும் கூட நோயுள்ளதாகவும் ரத்நாயக்க கூறினார். “நான் உட்பட அவர்களில் சிலர் தொழிற்சாலையின் ‘சிகிச்சை அறை’க்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஏனென்றால், எங்களால் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. இருவர் மயங்கி விழுந்தனர். அவர்களைத் தூக்கிச் செல்ல நான் உதவினேன். இவர்களுக்கு இரைப்பை அழற்சி இருப்பதாகக் கூறி சிகிச்சை அறையில் வலிநீக்கி குளிசைகளும் வேறு மருந்துகளும் கொடுக்கப்பட்டன.”
இரு நாட்களுக்குப் பிறகு ரத்நாயக்கவின் நிலைமை மோசமடைந்தபோது கடுமையான நெஞ்சு வலியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
“என்னால் மூச்சுவிட முடியாத அளவுக்கு நெஞ்சுவலி கடுமையாக என்னை வேதனைக்குள்ளாக்கியது. அந்த வேதனையில் நான் முதலில் எனது தாயாரைப் பற்றியே யோசித்தேன். அம்மாவைப் போன்று எனக்கும் மாரடைப்பு வந்துவிட்டது என்று அஞ்சினேன்” என்று ரத்நாயக்க கூறினார்.
ஆனால், பரிசோதனை அறிக்கைகளில் தீர்க்கமாக முடிவு எதையும் காணவில்லை. ரத்நாயக்கவுக்கு நிமோனியா நோய் இருப்பதாக டாக்டர்கள் உணர்ந்தார்கள். வைத்திய நடைமுறைகளின் ஒரு அங்கமாக கொரோனா அவருக்கு தொற்றியிருக்கிறதா என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டது.
“வைத்தியசாலையில் இருந்து நான் வெளியேற அனுமதிக்கப்பட்டபோது PCR பரிசோதனையில் எனக்கு தொற்றுநோய் தாக்கவில்லை என்றே அவர்கள் கூறினார்கள்” என்று ரத்நாயக்க சொன்னார்.
இரு நாட்கள் கழித்து அக்டோபர் 3ஆம் திகதி ரத்நாயக்கவுக்கும் அவரது கணவருக்கும் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. வைத்தியசாலை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் அரச புலனாய்வுச் சேவைகளிடமிருந்து கூட வந்த அழைப்புகள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பகைக் கூறின.
“அப்போதுதான் எல்லாமே ஆரம்பித்தன”, தனக்கு ஏற்பட்ட துன்பியல் அனுபவங்களை ரத்நாயக்க கூறத்தொடங்கினார்.
“வீட்டுக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் என்னை ஒரு கிரிமினல் போன்று நடத்தினார்கள். நான் யாருடன் படுத்தெழும்புவதாகவும் அதனால்தான் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். எனது வீட்டைச் சுற்றி அன்றைய தினம் பெருமளவு மக்கள் கூடினார்கள்” என்று ரத்நாயக்க கூறினார்.
தனது வீட்டுக்கு வந்த இரு பொலிஸ் அதிகாரிகள் மதுபோதையில் இருந்ததாக அவர் நம்புகிறார். “அவர்கள் எங்களை அவமதித்தார்கள். எனது கணவரையும் பிள்ளைகளையும் அவதூறு செய்தார்கள். தங்களுக்குப் பயந்து நாங்கள் மறைந்திருப்பதாக குற்றம்சாட்டினார்கள்.”
தொல்லை தொடர்ந்தது. ஆடைத் தொழிற்சாலையில் வைரஸைப் பரப்பியதாக அவரைக் குறைக் கூறி தொழிற்சாலை முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன.
“தொழிற்சாலையைப் பற்றி கெடுதியாக எதையும் ஒருபோதும் சொன்னதில்லை. எனக்கு அந்த தொழிற்சாலை இரண்டாவது வீடு போன்றது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு நான் இலக்காகியதாக கண்டுபிடிக்கப்பட்டதும் எனக்கு வெளிநாட்டினர் ஒருவருடன் காதல் தொடர்பு இருக்கிறதா என்று அவர்கள் என்னைக் கேட்டார்கள். அவ்வாறு ஒரு தொடர்ப்பு இருப்பதால்தான் வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் கூறினார்கள்” என்று ரத்நாயக்க தெரிவித்தார்.
$ads={2}
ரத்நாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது பிள்ளைகளில் இளையவளான 16 வயது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
வைரஸ் தொற்றின் தோற்றுவாய் என்று வர்ணிக்கப்பட்ட ரத்நாயக்கவுக்கு இது பெரிய தாக்கமாகிப் போய்விட்டது.
“எனது மகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டபோது அவள் மிகவும் பயந்துபோய்விட்டாள். அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல சுகாதார அதிகாரிகள் வந்தபோது அவள் அழத்தொடங்கிவிட்டாள்” என்று ரத்நாயக்க கூறினார்.
இத்தகையதொரு இடர்பாடுகளோடு அவர் இருக்கின்றபோதிலும் தொல்லைகள் நிற்கவில்லை.
ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து தொலைபேசி அழைப்புகள் வரும்போது அவர் சிரித்துவிட்டு தொலைபேசியை வைத்துவிடுவார். “அவர்கள் தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகளை எடுத்து உங்களுக்கு வெளிநாட்டவருடன் பாலியல் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தங்களுக்கு நம்பிக்கையாகக் கூறினால் எந்த விவரத்தையும் பகிரங்கப்படுத்தப் போவதில்லை என்று அவர்கள் உறுதியளித்தார்கள்.”
தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக ரத்நாயக்க நிராகரித்தார். அவரது 21 வருடகால கணவரான கயான் ரத்நாயக்கவும் அவரை நியாயப்படுத்தி பாதுகாத்தார்.
“முதலில் நான் கோபப்படவில்லை. ஆனால், கவலைப்பட்டேன். நற்குணங்களுடைய ஒருவருக்கெதிராக இவ்வாறாக அவதூறு பரப்பப்படுவதனால்தான் அந்தக் கவலை” என்று கணவர் சொன்னார். இந்த அவதூறும் வதந்திகளும் பரப்பப்படுவதன் நோக்கம் தொற்றுநோய் பரவலை முடிமறைப்பதற்கான ஒரு சதித்திட்டமேயாகும் என்றும் கயான் குற்றம்சாட்டினார். “இந்த வதந்திகளை யார் யார் பரப்புகிறார்களோ அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்கிறார்கள். பெருமளவு நோயாளிகள் இருப்பார்கள் என்று அவர்கள் நினைத்ததாக நான் நம்பவில்லை. எனது மனைவியை குற்றம்சாட்டிவிட்டு அவர்கள் தங்கள் கைகளைக் கழுவிக்கொண்டார்கள்” என்று கயான் மேலும் சொன்னார்.
ரத்நாயக்க மீதான தொல்லைகள் ஊடகங்களுக்குத் தெரியவந்த பிறகு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஊழியர்களை கம்பனி அலட்சியம் செய்வதாகவும் தொல்லைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தலைப்புச் செய்திகளாகின.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை ஆடை தயாரிப்பு தொழில்துறையே செய்துகொண்டிருக்கின்ற போதிலும், அந்தத் துறையின் தொழிலாளர்கள் சிறந்த வேதனத்துக்காகவும் கடமையின்போது அனுபவிக்க வேண்டியிருக்கின்ற அசெளகரியங்களில் இருந்து பாதுகாக்கும் சிறந்த வேலை சூழ்நிலைகளுக்குமாக போராட வேண்டியிருக்கிறது.
தொழிற்சாலைகள் இந்த தொழிலாளர்களை இயந்திரங்களாக நடத்துகிறார்கள் என்று ஒரு தொழிலாளர் உரிமை செயற்பாட்டாளரான அசிலா தன்தெனிய ‘வைஸ்’ தளத்துக்குக் கூறினார். “வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக கண்டுபிடிக்கப்பட்ட சிலர் வேலை செய்துகொண்டிருக்கும்போது மயங்கிவிழுந்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு உகந்த மருத்துவ பராமரிப்பு கிடைக்கவில்லை. நோயுற்ற பெண்களும் வேலை செய்ய வைக்கப்பட்டார்கள். ஏனென்றால், ஆடைக் கோரிக்கைகளுக்கான கால அவகாசத்தை கம்பனி பூர்த்திசெய்ய வேண்டியிருந்தது.”
தாங்கள் ஆடு மாடுகள் போன்று அடைக்கப்பட்டு இராணுவ அதிகாரிகளினால் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இரவில் துன்புறுத்தப்படுவதாகவும் தொழிலாளர்கள் முறையிட்டார்கள். என்ன நடக்கிறது என்பதை வெளியாருக்கு தெரியப்படுத்துவதை நிறுத்துமாறு பலர் நிர்பந்திக்கப்பட்டார்கள்.
தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10,000ஐ எட்டிவிட்டது. கொரோனா மரணங்கள் 100ஐ எட்டிவிட்டன.
நாடு தொடர்ந்தும் பரவலாக முடக்க ஊரடங்கின் கீழ் இருக்கிறது. கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா பரவல் அறிவிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன. பயணங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏனைய பகுதிகள் இராணுவத்தினராலும் அரசாங்கத்தாலும் விதிக்கப்பட்டிருக்கும் கண்டிப்பான சுகாதார வழிகாட்டல்களின் கீழ் தொடர்ந்து வழமைபோன்று இயங்குகின்றன. தொற்றுநோய் பரவலையடுத்து மூடப்பட்ட ஆடைத்தொழிற்சாலைகளின் வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடுகின்றன.
ரத்நாயக்கவையும் அவரது குடுபத்தினரையும் பொறுத்தவரை, அவர்களது கொந்தளிப்பான அனுபவங்களுக்குப் பிறகு ஓரளவு வழமை திரும்பியிருக்கிறது. 15 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரும் மகளும் ஆஸ்பத்திரியிலிருந்து அக்டோபர் 18 வீடு வந்திருக்கிறார்கள். மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு தான் தயார் என்று ரத்நாயக்க கூறினார். திகதி ஒன்று அறிவிக்கப்படாவிட்டாலும் கூட, அவரும் அவரது சக ஊழியர்களும் விரைவில் வேலைக்குத் திரும்புமாறு கேட்கப்பட்டிருக்கிறார்கள்.
$ads={2}
“முன்னர் இருந்ததையும் விட இப்போது நிறைவாக இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த நேரத்தில் வேலை செய்யாவிட்டால் எனது குடும்பத்துக்கும் எனக்கும் கட்டுப்படியாகாது. நாம் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வாழ்க்கையை ஓட்ட எமக்கு பணம் தேவை. அதனால், என்னதான் சொன்னாலும் செய்தாலும் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும்போது நான் வேலைக்கு திரும்புவேன்” என்று ரத்நாயக்க சொன்னார்.
What It’s Like When Everyone in Sri Lanka Thinks You’re Patient Zero என்ற தலைப்பில் Vice தளத்தில் 17.11.2020 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.