இலங்கையில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர், நீதி அமைச்சர் அலி சப்ரியை இன்றைய தினம் சந்தித்திருந்தனர்.
இதன்போது, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீதி அமைச்சர் அலி சப்ரியிடம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இதன்படி, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
$ads={2}
இதன்போது கருத்துரைத்த நீதி அமைச்சர் அலி சப்ரி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாட முடியும் என குறிப்பிட்டார்.
அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்தின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.