மினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! மதுமாதவின் சூழ்ச்சி அம்பலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! மதுமாதவின் சூழ்ச்சி அம்பலம்!

ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்குவைத்து கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகளுடன், பிவித்துரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு தொடர்புகள் இருந்தமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டது.

குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த விசாரணை அதிகாரிகள் இது தொடர்பில் சாட்சியங்கள் ஊடாக விடயங்களை வெளிப்படுத்தினர்.

$ads={2}


ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நேற்று முன்தினம் நவம்பர் 30ஆம் திகதி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஈஸ்டர் ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றன.

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்க்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இந்தப் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

வன்முறைகள் இடம்பெற்றபோது கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் விஜேசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்ர தீப்த லியனகே மற்றும் அப்போது மினுவாங்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த கே.ஆர்.ஏ. பிரியந்த ஆகியோர் இதன்போது சாட்சியமளித்தனர்.

இதன்போது முதலில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் விஜேசிங்க சாட்சியமளித்தார்.

"ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர், மே மாதம் 13 ஆம் திகதி நானும் அப்போது மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும், திஹாரி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற சர்வமத கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றிருந்தோம்.

அப்போதுதான் மினுவாங்கொடை பகுதியில் பல வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாம் மினுவாங்கொடை பகுதி நோக்கி சென்றோம். மினுவாங்கொடையை அடையும்போதும், மினுவாங்கொடை பெளஸ் ஹோட்டல் மற்றும் கல்லொலுவ சந்தியில் உள்ள இரு வீடுகள் மீது, மோட்டாச் சைக்கிள்களில் வந்த முகத்தை முழுமையாக மறைத்திருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 500 முதல் 2000 பேர் வரை மினுவாங்கொடை நகரில் கூடி வன்முறைகளை தூன்டும் வன்னம் நடந்து கொண்டனர். போதுமானளவு படையினர் இல்லாமையால் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இதன்போது மினுவாங்கொடை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உடபட 24 வர்த்தக நிலையங்களை அவர்கள் உடைத்து தீ வைத்து அழித்திருந்தனர்.

அப்பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்கும் தீ வைத்திருந்தனர். மினுவாங்கொடை பெளஸ் ஹோட்டலுக்கு முகத்தை மறைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தோர் சேதம் விளைவித்து தீ வைத்திருந்த நிலையிலும், ஒன்று கூடியவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கியிருந்தமையும் அடிப்படையாகக் கொண்டு இது ஒரு திட்டமிட்ட செயல் என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டது. ‘ என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், இந்த வன்முறைகளுக்கு 5 நாட்களுக்கு முன்னர் அப்பகுதி விஹாரை ஒன்றில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. அதற்கும் மதுமாதவ அரவிந்த சென்றுள்ளார் என்பது பின்னர் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.’ என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அந்தன தீப்த லியனகே சாட்சியமளித்தார்.

இதன்போது, இந்த தீ வைப்பு, தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின் பின்னணியில் ஏதேனும் அரசியல் கட்சிக்கு அல்லது அமைப்பொன்றுக்கு தொடர்புகள் உள்ளதாகவோ அல்லது அவர்களால் இது நெறிப்படுத்தப்பட்டதாகவோ விசாரணைகளில் தெரியவந்ததா? என அரசின் சிரேஷ்ட சட்டவாதி சுஹர்ஷி ஹேரத் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன தீப்த லியனகே,

"2019 மே 13 ஆம் திகதி இந்த வன்முறைகள் இடம்பெற முன்னர், வேகொவ்வ, கல்லொழுவ பகுதியில் ஸ்ரீ சுபத்ரா ராம விஹாரையில் ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. விஹாரையின் சிறிய பிக்கு ஒருவரை முஸ்லிம் இனத்தவர் ஒருவர் தாக்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

$ads={2}

அந்தச் சம்பவத்தை மையப்படுத்தி அப்பிரதேசத்தவர்கள் ஒன்று கூடி அந்த விஹாரையில் கலந்துரையடலை நடத்தியுள்ளனர். அந்த கலந்துரையாடலை ஜகத் எனும் நபரே ஏற்பாடு செய்துள்ளார். ஜகத் என்பவர், மதுமாதவ அரவிந்த எனும் பிவித்துரு ஹெல உறுமய கட்சி உறுப்பினரின் சகா. இதன்போது அந்த கூட்டத்துக்கு வந்துள்ள மதுமாதவ அரவிந்த ‘ இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக , கிளர்ந்தெழ வேண்டும் ‘ எனக் கூறியுள்ளார்.

அதிலிருந்து ஒரு வாரத்துக்கு பின்னரேயே மினுவாங்கொடை நகரில் குறித்த வன்முறைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. வன்முறைகள் இடம்பெற்றபோது மதுமாதவ அரவிந்த மினுவாங்கொடை பகுதியில் இருந்தமை விசாரணைகளில் தெரிய வந்தது. பின்னர், முஸ்லிம் இனத்தவர் ஒருவர் சிறிய பிக்கு ஒருவரை ( பயில் நிலை பிக்கு) தாக்கியதாக கூறப்பட்ட விடயம் கட்டுக் கதை என்பதும் விசாரணைகளில் உறுதியானது.’ என்றார்.

இதனைவிட, இந்த வன்முறைகள் இடம்பெற்ற நாளில், மதுமாதவ அரவிந்தவுக்கும் இந்த வன்முறைகளின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் ஜகத்துக்கும் இடையில் இரு தொலைபேசி அழைப்புக்கள் பரிமாற்றப்பட்டுள்ளமை, தொலைபேசி விபரங்களை ஆராயும்போது தெரிய வந்தது. என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன தீப்த லியனகே குறிப்பிட்டார்.

இதனையடுத்து மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.ஆர்.ஏ. பிரியந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

‘ தன்னை முஸ்லிம் இனத்தவர் ஒருவர் தாக்கியதாக பயில் நிலை பிக்கு தெரிவித்தமை பொய்யான விடயம் என்பதும், ஜகத் என்பவரின் கோரிக்கையில் அவர் அவ்வாறு பொய் யஉரைத்துள்ளதும் பின்னர் விசாரணைகளில் தெரிய வந்தது.

குறித்த பயில் நிலை பிக்குவின் முறைப்பாடு தொடர்பில் நான் விசாரணை முன்னெடுக்க அந்த விஹாரைக்குச் சென்ற போதும், அங்கு மதுமாதவ அரவிந்த இருந்ததைக் கண்டேன். இதன்போது மதுமாதவ அரவிந்த எனது தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பயில் நிலை பிக்குவுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் தேடிப் பார்க்குமாறும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

வன்முறைகள் பதிவான நாளுக்கு அண்மித்த நாட்களில் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் விசேடமாக மதுமாதவ அரவிந்த கவனம் செலுத்தியிருந்தமையை விசாரணைகளில் கண்டறிய முடிந்தது.

அத்துடன் வன்முறைகலின்போது தீ வைக்கப்பட்ட கடைத் தொகுதி பக்கமாக மதுமாதவ அரவிந்த நடமாடியமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மதுமாதவ அரவிந்த மற்றும் அவருடன் வருகை தந்திருந்த இருவர், ஜகத், நுவன் ஆகிய சந்தேக நபர்களைக் கைது செய்ய முயன்றபோது, அவர்கள் கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றை நாடியிருந்தனர்.’ என சாட்சியமளித்தார்.

இதனிடையே, மினுவாங்கொடை வன்முறைகளின் போது தீ வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள், மினுவாங்கொடை நகர சபைக்கு சொந்தமானவை எனவும் அவை குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தபோதும், அந்த வர்த்தக நிலையங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளமையும் ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த அனைத்து வர்த்தக நிலையங்களையும் அகற்றுவதற்கான உத்தரவு மினுவாங்கொடை நகர சபை தலைவர் நீல் ஜயசேகர ஊடாக வன்முறைகளுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்தது.
இது தொடர்பில் அவ்வந்த வர்த்தக நிலையங்களை நடத்திச் சென்றவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில், தங்களை நகர சபை தலைவர் எதேச்சதிகாரமாக வர்த்தக நிலையங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறி முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த தனது சாட்சியத்தில் கூறினார்.

$ads={2}


இதனிடையே, மினுவாங்கொடை நகர சபைக்குச் சொந்தமான நீர் பவுஸர் வண்டியை, வர்த்தக நிலையங்களில் பரவிய தீயை கட்டுப்படுத்த பயன்படுத்துவதற்கு கூட முடியாமல் போனதாகவும், சாரதி சேவையில் இருக்காமை அதற்கான காரணமாக கூறப்பட்டதாகவும் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார். வன்முறை இடம்பெற்ற நாள் திங்கட் கிழமையாக இருப்பினும், அந்த பவுஸர் வண்டியின் சாரதி அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரி , குறித்த விடயத்தை தெளிவுபடுத்த நகர சபையில் இருக்கவில்லை எனவும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

-எம்.எப்.எம்.பஸீர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.