
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது சந்தேகத்தில் இருக்கும் ஒருவர் இறந்தால், அவரின் உடலை தகனம் செய்யவேண்டியது அவசிமற்றது. இதனை பொது சுகாதாரத்துக்கு காரணமாக கூறமுடியாது. எனவே மத நம்பிக்கைகளுக்கு இந்த விடயத்தில் தடை ஏற்படுத்துவதை ஏற்கமுடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாட்சியப்பதிவுகள் முடிவடைவதற்கு முன்னரே உடலங்கள் அகற்றப்பட்டு தகனம் செய்யப்படுகின்றமை மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகளின் அடிப்படையில் இறுதி கிரியைகளுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாமை என்பன உரிமை மீறல்களாகும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
2020 நவம்பர் 09ஆம் திகதி வரை கொரோனாவினால் ஏற்பட்ட மரணத்தின் அடிப்படையில் 35 தகனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 17 தகனங்கள் முஸ்லிம் மக்களுடைய உடலங்கள் தொடர்பில் இடம்பெற்றுள்ளது. சில சந்தர்ப்பங்களில் வீடுகளில் ஏற்பட்ட மரண சம்பவத்தின் போது ஜனாஸாக்கள் வீடுகளில் இருந்து பலாத்காரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சில நேரங்களில் இறந்து போனவர்களின் உடலங்களில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சிலவேளைகளில் இறந்த பின்னர் 72 மணித்தியாலங்களிலேயே PCR பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.
இந்த வகையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் எனக்கூறி தகனம் செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம்களின் பெயர்கள் தற்போது கொரோனா மரண பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.