
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதற்கான காரணங்கள் தொடர்பில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான தேசிய செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்போது நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ் தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையானோர் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா,களுத்துறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டே மேல் மாகாணத்துக்கு நாளை தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதேவேளை, எஹலியகொட, கேகாலை, குருணாகல மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தை போன்றே, எஹலியகொட, குருணாகல் நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் குளியாப்பிட்டிய பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இதே போன்று நாளை காலை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி காலை 5 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
இதன் நோக்கம் என்னவெனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பணிபுரியும் நபர்களுக்கு மாத்திரம் இந்த பகுதிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர்ந்து வேறு எந்தவொரு நபரும் தமது வீடுகளை விட்டு வெளிவரக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பிரதேசங்களை விடவும் ஏனைய மாவட்டங்களிலும் குறைந்த அளவில் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இதில் எவரேனும் ஒருவர் கொரோனா தொற்று நோயாளர் என அடையாளம் காணப்பட்டால் அவரை உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய முதலாம் தொற்றாளர் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதுடன், இரண்டாம் மூன்றாம் நபர்கள் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.
எனவே இது குறித்து அனைவரும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். -மெட்ரோ நியூஸ்