பேலியகொடை மீன்சந்தையில் ஒன்லைன் பணமாற்றம்!

பேலியகொடை மீன்சந்தையில் ஒன்லைன் பணமாற்றம்!


பேலியகொடை மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக (ஒன்லைன்) மேற்கொள்வது தொடர்பாகவும் உள்ளுர் டின்மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் அண்மைக் காலமாக எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போதே குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேலியகொடை மீன் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் முயற்சியின் முதற் கட்டமாக மொத்த வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் கொரோனா பரவும் வழிகளில் ஒன்றாக பணத்தாள் பரிமாற்றங்களும் அமைவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்த மீன் வியாபார நடவடிக்கையின்போது, பணத்தாள் பரிமாற்றத்துக்குப் பதிலாக இணைய வழி பணப் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இலங்கை வங்கி அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக் கலந்துரையாடலில் உள்ளூர் டின்மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் கடலுணுவு ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள், தாங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், அவற்றிற்கு தீர்வுகளை வழங்கும் பட்சத்தில் கணிசமானளவு அந்நியச் செலாவணியை நாட்டுக்கு பெற்றுத் தருவதற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளனர்.


குறித்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி, உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கும், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post