மரம் நடுவோம்; மனிதம் காப்போம்..! ஆக்கம் எஸ்.ஏ.எம் மஹ்சூம்

மரம் நடுவோம்; மனிதம் காப்போம்..! ஆக்கம் எஸ்.ஏ.எம் மஹ்சூம்


இறை தந்த அருட்கொடைகளுல் அரும்பெறும் அருட்கொடையாக இயற்கை காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.இதனுள் நுழைய முன், பொழுதுபோக்கிற்காக பொடுபோக்காக இந்த கட்டுரையை எடுக்க இருக்கின்றீர்கள் என்றால் இதிலிருந்து கடந்து செல்லலாம்.

இது கடந்துசெல்பவர்களிற்கானதல்ல கடமையாய் எண்ணி களமாற்றுபவர்களிற்கானது.

அதிகரித்துள்ள வாகனப்புகை, தொழிற்சாலைகளின் சீரற்ற கழிவு வெளியேற்றங்கள், வெய்யோனிலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் கேடயமான ஓசோன் படையில் மெல்ல மெல்ல துவாரங்கள் பெருகி வருகின்றது என்று வெறுமனே செய்தியாகவே கேட்டுச் செல்கின்றோமே தவிர சிந்திப்பதாக இல்லை என்பதே இன்றைய நிலை பறைசாற்றுகின்றது.

மரக்கிளைகள் சாமரம் வீச இயற்கையின் அன்பான அரவணைப்புடன் மனக்கசப்புகள் நொடிப்பொழுதில் நீங்கிடவும் செய்திடும் அருமருந்தாக மட்டுமல்லாமல் நாம் உலகில் உயிர் வாழ்ந்திட தேவையான ஒட்சிசன் வாயுவினை வாரி வழங்கிடும் வள்ளலிற்கு நாம் செய்யும் கைமாறு அவற்றை அழிப்பதுதானா?

“ஆண்டான்டு காலம் அழுதுபுலம்பினாலும் மாண்டார் வருவதுண்டோ...” என்ற முதுமொழியின்படி சாய்க்கப்பட்ட மரங்களிற்காக கவலைப்பட்டு ஆகப்போவது எதுவும் இல்லை.

ஆயினும் நூறு மரங்கள் வீழ்த்தப்பட்ட இடத்தில் ஒரேயொரு மரக்கன்றையாவது நடுவதற்கு நம்மில் எவ்வளவு பேர் அக்கறை எடுத்துள்ளோம்? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஒட்சிசனை வெளியிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து ஓராண்டிற்கு 18 மனிதர்களிற்கான சராசரி ஆயுளிற்கான சுவாசத்திற்கு உதவுவதாகவும் தெரிவிக்கின்றன.அதுமட்டுமல்ல 2.6 டன் காபனீரொட்சைட்டினை வளியிலிரரூந்து உறிஞ்சிக்கொள்கின்றன.

தூய்மையான வழியை விலையேதுமின்றி வழங்கும் மரம் எனும் இவ்வளம் இல்லாமல் போனால் எமது நிலை என்ன என்று சற்று சிந்திப்போம்.

சமையல் எரிவாயு விலை கொடுத்து வாங்குவது போல் சிலிண்டர் சிலிண்டராக ஒட்சிசனை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் நாளொன்றிற்கு மனிதன் மூன்று சிலிண்டர் அளவிற்கு ஒட்சிசனை சுவாசத்திற்காக உள்ளெடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறெனில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வருடத்திற்கு எவ்வளவு என்று இப்படியான இக்கட்டான நிலை ஆயுள் முழுவதும் ஏற்பட விரும்புகிறீர்களா? இல்லை எனில் அதற்கான மாற்றீடாக இன்றே ஆரம்பியுங்கள் வீட்டிற்கு ஒரு மரமாவது நட்டு எதிர்கால சந்ததியினர் சுத்தமான வளியினை சுமூகமாக கிடைத்திட இன்றே வித்திடுங்கள்.

எண்ணிலடங்கா வளங்களை தன்னகத்தே கொண்டு தன்னடக்கத்தோடு இருக்கும் தரு எனும் இவ்விருட்சத்தினை நாம் எவ்வாறு பராமரிக்கின்றோம்? வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் முன்னோர். மரங்கள் அற்ற மயான சூழலில் தான் நாம் தாவரங்களின் அருமையை உணரப்போகின்றோமா?

சுவாசத்திற்காக மட்டுமல்லாமல் இன்று ஒவ்வொரு அங்கியின் ஆரம்ப உணவு உற்பத்தியாக்கியாக தாவரங்கள் காணப்படுகின்றன. தாவரங்களில் நிகழும் ஒளித்தொகுப்பு செயன்முறை மூலம் உணவு தொகுக்கப்படுகின்றது. 

அதுமட்டுமல்ல அதிகமான பறவைகள், விலங்குகளிற்கு உறைவிடமாக காணப்படுகின்றது. தன்னை முழுமையாக அர்ப்பணித்து உலகிற்கு உன்னத பங்களிப்பாற்றும் ஓர் உயரிய இறை அருட்கொடை தாவரங்கள்.

இன்று பூகோளமயமாதல் என்ற ஒரு செயற்பாட்டை காரணங்காட்டி இன்று உலகின் சுவாசப்பைகளாக காணப்படும் காடுகள் அளிக்கப்படுகின்றன. காடுகள் அழிவுறுவதால் பூகோள ரீதியாக இன்று காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு பாரிய விளைவுகளை இன்று உலகம் எதிர்கொண்டு இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

$ads={2}

காடுகள் அழிவுறுவதால் உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. வெப்பநிலை அதிகரிக்குமாயின் துருவ பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும்.

இவ்வாறு அவைகள் உருக ஆரம்பித்தால் சராசரி கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் சமுத்திரங்களை  அண்டியுள்ள தாழ்நில பிரதேசங்கள் மூழ்கக்கூடிய துர்பாக்கிய நிலை காணப்படுகிறது. இவ்வாறு ஏற்படுமானால் பல உயிர் உடமைகள் சேதங்கள் ஏற்பட வழிசமைக்கும். இது உலகில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை கொண்டு சேர்க்கும்.

அதுமட்டுமல்ல உலகில் வெப்பநிலை அதிகரிக்குமாயின் மக்கள் குளிர் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு இடம்பெயர்தல் அதிகரிக்குமாயின் புதிய நோய்கள் ஏற்பட வழிசமைக்கும். இவ்வாறு ஓர் சங்கிலிபோல் ஒன்றன்பின் ஒன்றாக முழு உலகமும் ஸ்தம்பித்து செல்லும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் என்பது இதன் ஊடாக விளங்கிக்கொள்ளமுடிகின்றது.

கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாம் படிப்பினைகளை பெற்று நிகழ்காலத்தை மிக தெளிவாக திட்டமிடுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை திறம்பட கையாள இறை உதவியால் முடியுமாக இருக்கும் என்பது திண்ணம். எனவே இன்று காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக சூழலை பாதுகாக்க பல சூழலியலாளர்கள் பாடுபடுகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் இன்று அனைத்து மாணவர்களிற்கும்  “Greta Thunbergh “ ஓர் முன்னுதாரணம் ஆகும்.

சிறுவயதிலேயே சூழல் மீது கொண்ட நாட்டம் இன்று அம்மாணவியிர் மூலம் பல மாணவர்கள் சூழல் மீது நாட்டம் கொண்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு மாணவனும் இதை உணர்ந்தால் ஏனைய அனைத்து மக்களும் விரைவில் உணர்ந்துகொள்வார்கள். 

இதற்காக இன்றுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் இதற்கு வழி சமைக்க வேண்டும். மேலும் நொடிப்பொழுதில் உலகின் ஏதோ ஓர் மூலையில் நிகழும் சம்பவத்தை உலகின் நாலாபுறமும் உள்ள சந்திகளில் செய்தியாக கொண்டு சேர்க்கும் ஊடகங்களும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்.

கைவிரல்கள் அனைத்தும் சேரும்போதுதான் கைதட்டல்களும் அதிகமாக இருக்கும் எனவே அனைவரும் கரம்கோர்ப்போம் நிலையான மாற்றத்திற்காய்..

மரம் நட்டு மனிதம் காக்க அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்.

"வழித்தடம்" - All University Muslim Student Association 
S.A.M.MAHSOOM
University of Ruhuna

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.