ஆர்மேனியா - அஸர்பைஜான் இடையேயான யுத்தம்; இரு தேசங்களின் முரண்களுக்குள் மறைக்கப்படும் சுதந்திரப் போராட்டத்தின் வீரியம்!

ஆர்மேனியா - அஸர்பைஜான் இடையேயான யுத்தம்; இரு தேசங்களின் முரண்களுக்குள் மறைக்கப்படும் சுதந்திரப் போராட்டத்தின் வீரியம்!


ஐரோப்பாவின் கிழக்கு மூலையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல். ஒரு சர்ச்சைக்குரிய பிராந்தியத்திற்காக இரு நாடுகள் சண்டையிடுகின்றன. இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள், பொருட்சேதங்கள். சண்டையை விடப் போவதில்லையென இரு நாடுகளும் பிடிவாதம் பிடிக்கின்றன.


அதற்குள் சர்வதேசத்தின் தகிடுதத்தங்கள். அரசியல் சூழ்ச்சிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாடுகளின் சுயநலம் கருதி வரலாறு மறைக்கப்படுகிறது அல்லது திரிபுபடுத்தப்படுகிறது.


கடந்த கால தவறுகளுக்கு நீதி நிலைநாட்டப்படுகிறதோ இல்லையோ, சமாதானம் பற்றிப் பேசப்படுகிறது. வரலாற்று ரீதியான அநீதிகள் ஆறாத காயங்களாகத் தொடர்கையில் வலிகளை மறந்து, காயம் ஏற்படுத்தியவர்களுடன் கை கோர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.


கிழக்கில் ஆர்மேனியா. மேற்கில் அஸர்பைஜான். நடுவில் இருக்கிறது, நகொர்னா-கரபாக் பிராந்தியம். சுமார் 11,430 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு. அங்கு ஒன்றரை இலட்சம் பேர் வரை வாழ்கிறார்கள். சட்டபூர்வமாக அஸர்பைஜானுக்கு சொந்தமானதென சர்வதேசம் அங்கீகரித்த பிராந்தியம். எனினும், யதார்த்தத்தில் ஆர்மேனியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பாகமாக இயங்குகிறது.


இங்கு தான் ஆர்மேனிய, அஸர்பைஜான் படைகள் சண்டையிடுகின்றன. ஒரு தரப்பு எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக மறுதரப்பு சாடுகிறது. கடும் பீரங்கித் தாக்குதலகள் நடத்தப்படுகின்றன. ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. 


இந்த சண்டைக்காக துருக்கிய ஜனாதிபதி சிரியாவில் இருந்தும் படைகளை அழைத்து வந்து எல்லையில்; குவித்துள்ளதாக ஆர்மேனியாவின் தரப்பில் இருந்து துருக்கி மீது குற்றம் சாட்டப்படுகிறது.


ஆர்மேனியப் படைகளுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதாக அஸர்பைஜான் சாடுகிறது. ஆர்மேனியா இராணுவ சட்டத்தை அமுலாக்கி, படைகளைக் குவிக்கையில், அஸர்பைஜானும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பல நகரங்களில் ஊரடங்குச் உத்தரவைப் பிறப்பிக்கிறது.

ரஷ்ய, பிரெஞ்சு ஜனாதிபதிகள் தொலைபேசியில் பேசுகிறார்கள். சண்டையை நிறுத்தச் சொல்கிறார்கள். சமாதான முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்கிறார்கள். சர்வதேச சமூகம் அழுத்தம் தொடுத்தாலும், ஆர்மேனிய, அஸர்பைஜான் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கிறார்கள். சண்டையில் பிடிவாதமாக இருக்கிறார்கள். 


இது எங்கே போய் முடியுமோ என்ற அச்சம் நீடிக்கிறது. சண்டை தீவிரம் பெற்றால், அது முழு யுத்தமாக பரிணமிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. இது பிராந்தியம் முழுவதிலும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றிய அச்சமும் தான்.


இந்தக் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குள் மறைக்கப்படுவது, சொந்த மண்ணில் சுயநிர்ணய உரிமையுடன் தனித்தேசமாக வாழ எண்ணும் மக்களின் அபிலாஷைகள் தான். இன்றைய ஆயுத நெருக்கடி ஆர்மேனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதலாக விபரிக்கப்படுகிறது. 


கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தேசமாக ஆர்மேனியா இருப்பதாலும், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தேசமாக அஸர்பைஜான் இருப்பதாலும், சில சமயங்களில் மதம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. கலாசார அடையாளங்கள் பற்றிய உண்மைகள் நிராகரிக்கப்படுகின்றன. வளங்களை சூறையாடும் சுயநல நோக்கங்கள் சூசுகமான முறையில் மறைக்கப்படுகின்றன.


நகொர்னா-கராபாக் என்றழைக்கப்படும் பிராந்தியத்தின் வரலாறு நெடியது. முதலாம் உலக மகாயுத்தம் வரை நீடிப்பது. இங்கு வாழும் மக்கள் தமது மண்ணை சுதந்திர தேசமாக சுயபிரடகனம் செய்து கொண்டவர்கள். அந்த அங்கீகரிக்கப்படாத தேசத்தின் பெயர் அர்த்சாக் குடியரசு என்பதாகும். ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படக் கூடிய சகல நிபந்தனைகளையும் அது பூர்த்தி செய்கிறது. ஒரு ஜனாதிபதி இருக்கிறார். அரசாங்கம் உண்டு. 

நாடாளுமன்றம் இயங்குகிறது. தாம் வாழும் ஆட்புலத்துடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய சனக்கூட்டம் இயங்குகிறது. இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையில அங்கம் வகிக்கும் எந்தவொரு நாடும் அர்த்சாக்கை ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பதில்லை.


இந்தப் பிராந்தியம் 1918ஆம் ஆண்டு முதன்முதலாக சுதந்திரப் பிரகடனம் செய்தமை பெரிதும் அறியப்படாத அல்லது மறைக்கப்படும் விஷயம். முதலாம் உலக மகாயுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த பூகோள அரசியல் மாற்றங்களின் ஒரு கட்டமாக சுதந்திரப் பிரகடனம் நிகழ்ந்தது.


ஆபிரிக்காவிலும், பால்கன் பிராந்தியத்திலும் ஒட்டோமான் பேரரசின் ஆதிக்கம் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கிய சமயத்தில், துருக்கியர்கள் கிழக்கு நோக்கி செல்வாக்கை செலுத்தத் தொடங்கினர். குறிப்பாக, அஸர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் குடியமர்ந்துள்ள தமது மக்கள் குழுமங்களை தமது ஆளுகைக்கு உட்படுத்த முனைந்தார்கள். பரந்த நிலப்பரப்பை வரையறை செய்து, அதனை துருக்கியர்களின் தேசமாக மாற்றுவது அவர்களின் நோக்கம்.


இந்த முயற்சிக்கு ஆர்மேனியா முட்டுக்கட்டையாக இருந்தது. துருக்கியில் இருந்து பாரசீகம் வரை பாதை அமைப்பதை ஆர்மேனியர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அஸர்பைஜானை நோக்கி நகரும் முயற்சிகளும் முடக்கப்பட்டன.


இந்தக் காலப்பகுதியில் ஆர்மேனியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுஞ்செயல்களை இனச்சுத்திகரிப்பாக அங்கீகரித்த நாடுகள் ஏராளம்.


ஒரு கட்டத்தில், துருக்கியும், ஆர்மேனியாவும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. இதனை ஆர்மேனிய மக்கள் தம்மீதான அதிகாரத் திணிப்பாக நோக்கினார்கள். பெருமளவு நிலப்பரப்பை காவு கொள்ள வழிவகுக்கும் வகையில், எல்லைகளை மீள வரைந்தமை இதற்குக் காரணம். உடன்படிக்கை 1918ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஒன்றரை மாதத்திற்குள் நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தில் வாழ்ந்த மக்கள் சுதந்திரப் பிரகடனம் செய்தார்கள்.


இதற்குப் பிறகும் மோதல்கள் தொடர்ந்தன. தொடர்ந்தும் ஆர்மேனியர்கள் மீது கொடுஞ்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சில மாதங்களில் ஓட்டோமான் பேரரசு கூட்டாளிகளுடன் சேர்ந்து போர்நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டது. 


இதன்மூலம், குறித்த பிராந்தியத்தை அஸர்பைஜான் இணைத்துக் கொள்ள வழிபிறந்தது. இங்கு பிரிட்டன் உதவி செய்தது. அஸர்பைஜானில் இருந்து கூடுதலான எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பது பிரிட்டனின் நோக்கம். எண்ணெய் வளங்கள் ரஷ்யாவிற்கு கிடைப்பதைத் தடுப்பதும் மற்றொரு நோக்கம். 


மறுவருடம், பாரிஸில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தை அஸர்பைஜானிடம் ஒப்படைக்க சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஆர்மேனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் மீண்டும் போர் ஏற்பட்டது. ஜோசப் ஸ்டாலின் சில பகுதிகளை அஸர்பைஜானிடம் ஒப்படைத்தார். எல்லைகள் மீள வரையப்பட்டன.


1988ஆம் ஆண்டு மீண்டும் நகொர்னோ-கராபாக் பிராந்தியம் பற்றிய உரிமைப் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, இந்தப் பிராந்தியம் சோவியத் ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது. கராபாக்கில் வாழும் ஆர்மேனியர்கள் தமது பிராந்தியத்தை அஸர்பைஜானில் இருந்து ஆர்மேனியாவிற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்கள். 


இது பெரும் நெருக்கடிக்கு வழிவகுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஆர்மேனியாவும், அஸர்பைஜானும் தனி நாடுகளாயின. நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தில் வாழ்பவர்கள், தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க நினைத்தார்கள். 1991ஆம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிராந்தியத்தைச் சேர்ந்த 96 சதவீத வாக்காளர்கள் கருத்துக் கணிப்பை ஆதரித்தார்கள்.


1992இல் மீளவும் கடுஞ்சண்டை தொடங்கியது. இரு வருடங்கள் நீடித்த போரின் முடிவில், குறித்த பிராந்தியத்தின் பெருமளவு நிலப்பரப்பு ஆர்மேனியாவின் வசமாகியிருந்தது. போரின் விளைவாக, அஸர்பைஜானில் இருந்த ஆர்மேனியர்களும், ஆர்மேனியாவில் இருந்த அஸெர்பைஜானிகளும் பெருமளவில் இடம்பெயர்ந்தார்கள்.


இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் சர்வதேச சமூகத்தின் தலையீடு நிகழ்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை உருவாக்கும் நோக்கத்துடன் மின்ஸ் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைத்தலைமை வகித்தன.


ரஷ்யா பூடகமான முறையில் நடந்து கொண்டது. ஆர்மேனியாவிற்கும் ஆயுதங்களை வழங்கியது. அஸர்பைஜானுக்கும் ஆயுதங்களைக் கொடுத்தது. ஆர்மேனியா மீது சற்றுக் கூடுதல் அக்கறை. அஸர்பைஜானில் எரிபொருள் ஏற்றுமதி மூலம் பயன்பெறும் மேற்கு நாடுகளை மறைமுகமாகத் தண்டிப்பது ரஷ்யாவின் நோக்கமாக இருக்கலாம். இந்தப் பிராந்தியத்தில் தமது செல்வாக்கையும் தக்க வைத்துக் கொண்டு, மேற்கு நாடுகளுக்கு எதிராக செயற்படுவது ரஷ்யாவின் ராஜதந்திரம்.


இரு வருடங்கள் நீடித்த யுத்தத்தை முடிவு கட்டுவதற்கு ரஷ்யாவும், மின்ஸ்க் குழுவும் பகீரதப் பிரயத்தனம் செய்தன. ரஷ்யாவின் அனுசரணையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வரையும் முயற்சி மின்ஸ்க் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மின்ஸ்க் குழு ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பின் முயற்சியால் உருவானதாகும். இது ஆறு அம்சத் தீர்வுகளை முன்மொழிந்தது. 


இவற்றில், நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தின் எதிர்காலத்தை அங்கு வாழும் மக்கள் கருத்துக் கணிப்பின் மூலம் தீர்மானிக்க இடமளிப்பது, அதுவரையில் சுயாட்சியை ஏற்படுத்தும் இடைக்கால கட்டமைப்;பை ஏற்படுத்துவது, அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பும் உரிமையை உறுதிப்படுத்துவது போன்ற யோசனைகளும் உள்ளடக்கம்.


இந்த உடன்படிக்கை ஆர்மேனிய, அஸர்பைஜான் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டாலும், இதனை அமுலாக்கச் செய்வதில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக, இருதரப்புக்களுக்கும் இடையில் மீண்டும் மீண்டும் மோதல்கள் நிகழ்ந்தன. 2016ஆம் ஆண்டில் நிகழ்ந்த நான்கு நாள் யுத்தத்திலும் உயிர்ப்பலிகள் இடம்பெற்று, பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தார்கள். 

அதன் தொடர்ச்சியாக, அவ்வப்போது மோதல்கள். அஸர்பைஜானி இராணுவம் நடத்திய தாக்குதல்களில் நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தைச் சேர்ந்த படைவீரர்கள் கொல்லப்படுவதும், இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அஸர்பைஜான் படைவீரர்கள் உயிரிழப்பதும் வழமையாக மாறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சமகால மோதல்கள் நிகழ்கின்றன. இது முடிவதற்குரிய அறிகுறிகளும் தென்படவில்லை.


இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்டால், இப்போதைக்கு தீர்வு கிடையாது என்றே சொல்லலாம். பிராந்திய ரீதியிலான பூகோள அரசியல் நலனில் அக்கறை கொண்டு சுயநலமாக செயற்படும் வல்லரசுகள் பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை. இதற்குக் காரணம், பிராந்தியத்தில் உள்ள எண்ணெய், இயற்கை வாயு வளங்கள்.


கஸ்பியன் கடலில் இருந்து துருக்கி ஊடாக எரிபொருளைக் காவிச் செல்லும் எரிபொருள் குழாய்கள் முக்கியமானவை. இந்தக் குழாய்கள் மூலமாகவே ஐரோப்பிய பிராந்தியத்திற்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக, கடந்த காலங்களில் அஸர்பைஜானில் இருந்து கூடுதலான எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. 


இந்த நிலையில், அஸர்பைஜானைப் பகைத்துக் கொள்ள முடியாது. இதற்காகவே, நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தை அஸர்பைஜானுக்கு உட்பட்டதாக வைத்திருக்க ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை அஸர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரித்திருக்கின்றன.


இங்கு துருக்கியின் பிரச்சனை வேறு மாதிரியானது. அது கலாசாரத்துடன் தொடர்புடையது. முதலாம் உலக மகாயுத்த காலத்தில் நிகழ்ந்த இடம்பெயர்வுகள் மூலம் கூடுதலான துருக்கியர்கள் அஸர்பைஜானுக்கு இடம்பெயர்ந்தார்கள். ஆகவே, அஸர்பைஜானில் வாழ்பவர்களுக்கும், துருக்கிக்கும் இடையிலான கலாசார பண்பாட்டுத் தொடர்புகள் இருக்கின்றன. 


மறுபுறத்தில், ஆர்மேனியாவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். தமது பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட மக்கள் குழுவைப் பாதுகாப்பாற்காக, சிரியாவில் இருந்தும், லெபனானில் இருந்து ஆயுதக் குழுக்களை அனுப்பி வைத்திருப்பதாக ஆர்மேனியர்கள் துருக்கி மீது குற்றம் சுமத்தினால், அதனை வெறுமனே நிராகரிக்க முடியாது.


அடுத்தது, ஈரான் பற்றிய பிரச்சனை. ஆர்மேனியா கிறிஸ்தவ தேசமாக இருந்தாலும், அதனுடன் ஈரான் சிறப்பான உறவுகளைப் பேணுகிறது. அது தவிர, பூகோள அரசியலில் ரஷ்யா ஆர்மேனியாவின் பக்கம் சற்று அதிகமாக சாய்ந்திருப்பதால், ஆர்மேனியாவை ஆதரிப்பது அரசியல் நன்மைகளைத் தரும். இன்னொரு காரணமும் உண்டு. ஈரானின் வடபகுதிலும் அஸெர்பைஜான் மரபுகளை அனுசரிக்கும் துருக்கியர்கள் வாழ்கிறார்கள். 


இந்த மக்கள் குழுமம் மத்தியில் துருக்கிய தேசியவாத சிந்தனை தீவிரம் பெற்று வருகிறது. இந்தக் குழுமத்தை சர்வதேச சக்திகள் ஈரானுக்கு எதிராக தூண்டி விடுவதற்கு எளிது. ஈரானின் வடபகுதியிலும், அஸர்பைஜானின் தென்பகுதியிலும் வாழும் அஸெரி மக்கள் கூட்டம் சமூக மற்றும் கலாசார ரீதியான பொது அடையாளத்தைக் கொண்டிருப்பதால், அந்த மக்கள் குழுமம் ஒரு பிராந்தியமாக மாற வேண்டும் என்ற வாதங்களும் உள்ளன. இது ஈரானுக்கு ஆரோக்கியமானது அல்ல.


இதில் முக்கியமான விடயம் யாதெனில், நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களின் உணர்வலைகளே. அவர்கள் தமக்கென குடியரசை ஸ்தாபித்து தம்மை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்ற கோரிக்கையை நெருக்கடியில் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பும் பொருட்படுத்துவதில்லை. 


அர்த்சாக் குடியரசு என்ற இராச்சியத்தை அடைவதற்காக அவர்கள் ஆரம்பித்த விடுதலைப் போராட்டம் மூன்று தசாப்தங்களைக் கடந்துள்ளது. அந்தப் பிரச்சனையை மின்ஸ்க் குழுவின் மூலம் அடையாளம் கண்ட போதிலும், அதற்கு அங்கீகாரம் வழங்கவும் இல்லை.


இன்று நகொர்னோ-கராபாக் பிராந்தியத்தில் வாழ்பவர்களில் 95 சதவீதமான மக்கள் ஆர்மேனியர்கள். அஸர்பைஜானைச் சேர்ந்த மூலக்குடிகள் இல்லையென்றே சொல்லலாம். இந்தப் பிராந்தியம் ஐநா தீர்மானங்கள் ஊடாக அஸர்பைஜானுக்கு உடமையாக்கப்பட்டு இருக்கிறது. 


தமக்கு சுயநிர்ணய உரிமை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தம்மை ஆர்மேனியாவுடன் இணைய விடுங்கள் என்று பிராந்திய மக்கள் விடுக்கும் கோரிக்கையும் செவிமடுக்கப்படுவதில்லை.


அனைத்து முரண்பாடுகளும், யுத்தங்களும் அர்த்சாக் குடியரசு நோக்கிய உணர்வு ரீதியான உரிமைப் போராட்டங்களாக இருக்கையில், இதனை இரு நாடுகளுக்கு இடையிலான நிலப்பரப்பின் நெருக்கடியாக நோக்கி அரசியல் செய்வது தான் சர்வதேச சமூகம். இதுவே இன்றைய உலகின் யதார்த்தம்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post