காரினுள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர்!

காரினுள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர்!

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் மஹிந்த விஜயசிறி நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேரண - கெஸ்பேவ பிரதான வீதியில் இன்று (18) காலையில் வர்த்தக நிலையமொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது வர்த்தக நிலையத்தின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார், அரைமணி கழிந்தும் அவ்விடத்திலே நிறுத்தப்பட்டிருப்பதை அவதானித்த வர்த்தக நிலையத்தின் பணியாளர் ஒருவர் அதன் அருகில் சென்று பார்த்தபோது, அதற்குள் ஒருவர் சாய்ந்துகிடப்பதை  அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது கஹத்துட்டுவ - பொல்கஸ்வோவிட்ட பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய மஹிந்த விஜயசிறி என்ற முன்னாள் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் என அடையாளம் காணப்பட்டார்.

கஹத்துட்டுவ பகுதியிலிருந்து நுகேகொடவிற்கு தனது தனிப்பட்ட தேவையின் காரணமாக சென்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மஹிந்த விஜயசிறி கடந்த 2000 -2004 வரையான காலப்பகுதியில் பரீட்சைகள் திணைக்கள் ஆணையாளராக பணிபுரிந்துள்ளார்.

சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ,சடலம் அது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post