
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட உள்ள இந்த நிகழ்வில் முதலாவதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியாம்பலாப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் முன்மொழியப்பட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் நிகழ்த்தப்பட உள்ளது.
இம்முறை ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் நிகழ்வு சாதாரணமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி வருகையின் போது மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்புகள் போன்றவை இடம்பெற மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்குள் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் முப்படையினரின் பங்களிப்புடன் கலாசார நடனம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில் சில கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களே இவ்வாறு அறிவிக்கப்படாமல் உள்ளது.
எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் வகையில் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணையக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் தீர்வுகள் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பாக இன்று தீர்வொன்றை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், இன்றைய தினம் இடம்பெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற ஒன்றுகூடல் குறித்த இரு தேசியப் பட்டியல் ஆசனங்களும் அமர்வில் வெறுமையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.