சங்காவை தாக்கும் அரசியல் பின்னணி! சில சந்தேகங்கள்!

சங்காவை தாக்கும் அரசியல் பின்னணி! சில சந்தேகங்கள்!

இலங்கை மக்களுக்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கின்றது. அதிலும் கிரிக்கட் என்பது அவர்களின் உயிர் மற்றும் உதிரத்துடன் கலந்த ஒரு விடயம் என்று சொல்லமளவுக்கு இருக்கின்றது. எனவே தற்போது அரசியல்வாதிகள் தமது அபிமானத்துக்குறிய விளையாட்டு வீரர்களை அவமதிப்பது தொந்தரவு செய்வதை பொதுமக்கள் மிகுந்து கோபத்துடன் பார்க்கின்றார்கள்.

கட்சி பேதமின்ற அவர்கள் இது விடயத்தில் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இதனை நாம் தினம் தோரும் ஊடகங்களில் பார்க்கின்றோம். இந்த நேரத்தில் அபிமானத்துக்குறிய கிரிக்கட் வீரர்கள் மீது அரசியல் வாதிகள் தாக்குதல் நடத்துவது ஏன் என்ற விடயத்தில் பல சந்தேகங்கள் நமக்கு இருக்கின்றது.

அதற்கு முன்னர் இந்த சங்கக்கார விடயத்தில் நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெளியிட்ட ஒரு செய்தி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லது பாராளு மன்றத்திலும் இந்த விவகாரம் பற்றி உறுப்பினர்கள் தமக்குள் கருத்தக்களை பறிமாறி இருந்தார்கள்.

பின்னர் இது விடயத்தில் குமார் சங்கக்காரவே நேரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டு தினக்குரல் கட்டுரையாளர் நல்லதொரு கற்பனைக் கதையை நாட்டு மக்களுக்கு கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் என்றும் அதில் சொல்லி ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டிக்கு வரப்போவதில்லை என்று நமது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாமும் இந்த விளக்கத்தை வாசகர்களுக்கு எத்திவைத்து சங்கக்கார விவகாரத்தை முடித்துக் கொண்டோம். ரணில் இது விடயத்தில் சங்கக்கார தந்தையைத் தொடர்பு கொண்டது, ராஜித தூது போன கதைகள் நமக்குத் தெரிந்ததால்தான் அதனை நாம் எழுதி இருந்தோம்.

ஆனால் இந்தக் குமர் சங்கக்கார விடயத்தில் ஏதோ திறைக்குப் பின்னால் ஒரு கதை- ஒரு மர்மம் இருக்கின்றது என்று நாங்கள் நம்புகின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர் போட்டிக்கு வருகின்றார் என்று பரவலாக கதை அடிபட்ட போது ராஜபக்ஷகளுக்கு ஒரு அச்சம் பயம் வந்தது. இதற்கு காரணம் குமார் சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்டவர் கோடிக் காணக்கான ரசிகர்களை-அபிமானிகளை வைத்திருப்பவர். இதற்கு மத்தியில் பாகிஸ்தானில் புகழ்பெற்ற கிரிக்கட் வீரர் இம்ரான் கான் அந்த நாட்டில் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்த பின்னணியும் இருந்தது. எனவே அவர் வேட்பாளராகி இருந்தால் சஜித்தைவிட அவர் ஒரு செல்வாக்கான வேட்பாளராக இருந்திருக்க அதிக வாய்ப்புக்கள் அன்று இருந்தது.

தனிப்பட்ட ரீதியில் குமர் சங்கக்கார மிகவும் நிதானமும் மென்மையுமான ஒரு மனிதர். படித்தவர், சட்டத்தரணியும் கூட. இப்போது இந்தத் தேர்தல் நேரத்தில் ஏன் சங்கக்கார மீதும் கிரிக்கட் மீதும் அரசியல்வாதிகள் கல்லெறிகின்றார்கள் என்பதனை சற்றுப் பார்ப்போம். ஆளும் தரப்பினருக்கு இந்த சங்கக்கார மீது ஒரு அச்சம் பயம் இன்னும் இருக்கின்றது. அத்துடன் சர்வதேச கிரிக்கட் சபைக்கு சங்கர போட்டியிடும் ஒரு கதையும் இருக்கின்றது. அப்படி ஒரு செல்வாக்கான பதவிக்கு அவர் தெரிவானால் இலங்கையில் மிகவும் செல்வாக்கான ஒரு மனிதனாக அவர் வளர்ந்து விடுவார். அவர் புகழ் மேலும் உச்சத்துக்குச் சென்றுவிடும்.

இது ராஜபக்ஷக்களுக்கு ஒரு கலக்கத்தையும் பயத்தையும் கொடுத்திருக்க வேண்டும். எனவே குமார் சங்கக்காரவுக்கு சேறுபூசி அவர் வளர்ச்சியை முளையிலே கிள்ளிவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த வேலையை மஹிந்தானந்தாவை வைத்து செய்தார்களோ என்ற ஒரு சந்தேகம் நமக்கு வருகின்றது. மஹிந்தானந்த என்பவர் ராஜபக்க்ஷக்களுக்கும் அவர்களது வாரிசான நமலுக்கும் மிகவும் நெருக்கமானவர். எனவேதான் இந்த மஹிந்தானந்தாவை வைத்து அவர்கள் சங்கக்காரவுக்குக் கல்லெறிந்திருக்க வேண்டும்.

குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கட் சபையின் தலைமைப் பதவிக்குத் தெரிவாகினால் அவர் உலகில் ஒரு ஜனரஞ்சக மனிதராகி விடுவது தவிர்க்க முடியாத ஒன்று. அந்தப் பதவிக்குப் பின்னர் அவர் உள்நாட்டு அரசியலில் கால் பதிக்க வந்தால் தங்களுக்கு அவர் ஒரு ஆபத்ததான மனிதராகி விடுவார். செல்வாக்கான நாடுகள் பலவும் அவருக்குக் குரல் கொடுக்க முன்வரும் செல்வாக்கான உலக அமைப்புக்களும் சங்கக்கார பக்கமே இருக்கும். பணத்துக்கு மனிதன் வாய்ப்பை விற்று விற்றார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினால் உள்நாட்டில் அவருக்கு மக்களிடத்தில் தற்போது இருக்கின்ற செல்வாக்கு இல்லாமல் பேவதுடன் அவரை மக்கள் தூற்றுகின்ற ஒரு நிலையும் இந்தக் குற்றசாட்டால் வரும்.

எனவே தான் இவ்வளவு காலமும் இது விடயத்தில் மௌனமாக இருந்த அரசியல்வாதிகள் தற்போது கிரிக்கட் மீதும் சங்கக்கார மீது சேறுபூசுகின்றார்கள் என்றால் அதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கத்தான் வேண்டும். விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் பொலிஸ் பிரிவு அமைச்சர் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்த ஓரிரு நாட்களுக்குள்ளேயே அது பற்றி விசாரணைகளை ஆரம்பித்தது. அந்த விசரணைகளை பொலிசார் முன்னெடுத்துச் சென்ற ஒழுங்கும் விநோதமாக இருந்தது. கிரிக்கட் வெற்றியை பணத்தக்கு விற்றுவிற்றார்கள் என்ற ஆதாரமற்ற கூற்றை விசரிக்கும் பொலிஸ் அமைச்சரை வீடுதேடிச் சென்று கௌரவமாக தகவல்களைப் பெற்றிருக்கின்றது.

அதே நேரம் நாட்டுக்கு கொளரவத்தையும் வெற்றிகளையும் கொண்டு வந்த குமார் சங்கக்கார போன்ற கிரிக்கட் வீரர்கள் எட்டு மணித்தியலங்களுக்கு மேலாக குற்றப் பிரிவு பொலிசுக்கு அழைத்து விசாரணை செய்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த விவகாரம் பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்களுக்கு இலக்காகி கடும் விமர்சனத்தை உண்டு பண்ணிய போது பொலிசார் நடந்து கொண்ட முறை முற்றிலும் தவறானது என்று ஆதரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த அமைச்சரே பொலிசாருக்கு எதிராகவும் குரல் கொடுக்கவும் வந்தது.

நான் கிரிக்கட் வீரர்கள் பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லை. முகாமையாளர்களைத்தான் குற்றம் சாட்டினேன் என்று தனது கருத்தை மாற்றி சமாளிக்க முயன்றார். அப்படியானால் முகாமையாளர்கள் யார்.? அரவிந்த டி சில்வாதான் அந்தக் காலத்தில் முக்கிய பதவியில் இருந்தார். இலங்கைக்கு உலகக் கோப்பையைக் கொண்டு வந்தவர்களில் அவர் பங்கு மகத்தானது! ஒட்டு மொத்த கிரிக்கட் வீரர்களும் அமைச்சரின் இந்தக் கூற்றுக்கு எதிராக ஓரே அணியில் இன்றுவரை நிற்க்கின்றார்கள். அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்படுவது போல் கிரிக்கட் வீரர்களும் பணத்துக்கு விலைபோகாது இருந்தால் நல்லது.

மேலும் எஸ்.பி.திசாநாயக்க, திலங்க சுமத்திபால போன்றவர்களும் மஹிந்தானந்த கருத்துக்களுக்கு சாதகமான கருத்துக்களைத் தெரிவித்து அவரைக் காப்பற்ற முனைகின்றனர். அது மஹிந்தானந்தாவைக் காப்பற்றும் விவகாரம் என்றதனை விட ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசம் காட்டுகின்ற செயல் என்பது எமது கருத்து. திலங்க சுமத்திபால ஒருபோதும் சங்கக்காரவுக்கு சர்வதேச கிரிக்கட் தலைமைப் பதவிக்குப் போட்டியிட முடியாது அதற்கான தகைமையை அவர் அடையவில்லை என்று சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இதே பதவிக்கு ஒரு காலத்தில் குதிரைப் பந்தயக்காரரான திலங்க சுமத்திபால கனவு கண்டதும் நாம் அறிந்ந விடயமே. இப்போது எட்டாத பழம் அவருக்குப் புளிக்கின்றது. அடுத்தவருக்கு அது கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் அவர் கருத்தில் நாம் வரும் முடிவு.

இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அதனை விட்டுவிடுங்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸாவே சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார். எனவே பிள்ளையையும் ஆட்டிக் தொட்டிலையும் கிள்ளிவிடும் விளையாட்டா இது என்று நாம் கேட்கத் தோன்றுகின்றது. எதிரணி அரசியல்வாதிகள் இந்த விவகாரங்களைத் தற்போது தூக்கிப்பிடித்து அரசுக்கு எதிரான ஒரு தேர்தல் பரப்புரையை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விவகாரம் அவர்களுக்கு தமது இலக்கை அடைய ஒரு போதும் உதவ மாட்டாது- போதுமானதுமல்ல. என்றாலும் கிரிக்கட் பற்றிய ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கருத்து மக்களிடத்தில் காயங்களை எற்படுத்தி இருக்கின்றது. இது தேர்தலில் ஒரு சின்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் தேர்தல் முடிவுகளில் அது பெரிய செல்வாக்கை செலுத்த மாட்டாது என்பதுதான் எமது கருத்து.

திலங்க சுமத்திபால கருத்துத் தொடர்பில் ஜேவிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கின்ற போது திலங்க சுமத்திபால குதிரையைப் பார்த்துக் கொண்டால் போதும் கிரிக்கட்டை பாhக்க வேறு ஆட்களுக்கு விட்டுவிட வேண்டும் என்று கூறி இருக்கின்றார். அவர் திலங்காவுக்கு குதிரையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதன் கருத்து திலங்க ஒரு குதிரைப் பந்தய தொழில் புரிக்கின்றவர் என்பதால்தான்.

இது பற்றி புகழ் பெற்ற ராவய பத்திரிகை ஆசிரியர் விக்கடர் ஐவன் கருத்தத் தெரிவிக்கும் போது கடந்த காலங்களில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பிழையான கருத்துக்களை முன்வைத்து வன்முறையாக நடந்து கொண்டு வருகின்றன. அண்மைக் காலத்தில் டாக்டர் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டு மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேரசிரியர் ரத்னஜீவனுக்கு எதிராக இனவாக் கருத்தைப்போல்தான் கிரிக்கட் தொடர்பான இவர்கள் கருத்தும் இருக்கின்றது. இதில் மறைக்கப்பட் நிகழச்;சி நிரல் ஒன்று இருக்க வேண்டும் என்று எம்மைப்போலவே அவரது நிலைப்பாடும் இருக்கின்றது.

எனவே சங்காவுக்கு எதிரான இந்தக் கருத்துக்களில் உள்நோக்கம் இருப்பதை எவருக்கும் மறுக்க முடியாது. அவர் பந்தயத்துக்கு ஆட்டதை விற்பனை செய்திருந்தால் அப்போது அமைச்சர் அதற்கு உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் மஹிந்தானந்த தானே அன்று துறைக்குப் பொறுப்பான அமைச்சர். அத்துடன் அவர்கள் அரசுதானே அப்போதும் இருந்தது. இன்றும் இருக்கின்றது.

இதனை தேர்தல் மேடைகளிலும் ஊடகச் சந்திப்புக்களிலும் செல்வதை விட அரசின் செல்வாக்கான அமைச்சர் மஹிந்தானானந்த சட்டரீதியில் இந்த பிரச்சினைகளை நோக்லாமே. ஆனால் தற்போதய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் முன்னாள் அமைச்ரின் இந்தக் கருத்துக்கு எந்தக அடிப்படையும் கிடையாது. தமது அமைச்சில் அது பற்றி எந்த ஆதரரங்களும் கிடையாது என்று குறிப்பிட்டிருப்படுடன் சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் இதே கருத்தைதான் சொல்லி சொல்லி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அமைச்சர் எங்கிருந்து இந்த தகவல்களை கொண்டு வந்து கிரிக்கட் வீரர்களை நெருக்கடிக்கு ஆளாக்கின்றார் என்பது கேள்விக்குறி.!

அரசியல்வாதிகளின் உள்நோக்கம் கொண்ட கிரிக்கட் மீதான பரப்புரைகள் அப்படி இருக்க இப்போது தேர்தல் களத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பலர் இன்றும் உறக்கத்திலீருந்து எழும்பாத நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் அவர்கள் இன்று வரை தேர்தல் பணிமனைகளைக் கூட திறக்காமல் இருக்கின்றார்கள். இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அவர்கள் கோமாவில் இருக்கின்றார்களோ என்று கேட்கத் தோன்றுகின்றது.

எதிரணிக்கு சிறு அளவில் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு தேர்தல் மாட்டம் கண்டி. அங்கு சிறுபான்மையினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற அக்குரண போன்ற இடங்களில் அமைப்பாளர்-வேட்பாளர் இன்று வரை ஒரு காரியாலயத்தையாவது திறக்காமல் இருப்பது இவர்கள் களத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்களோ என்று நமக்குச் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. பெரும்பாலான இடங்களில் இதே நிலை காணப்படுகின்றது.

சஜித் அணியின் செயல்பாடுகள் சில இடங்களில் உட்சகமாக இருந்தாலும் தனி நபர்களின் வெற்றியை இலக்காக் கொண்ட ஒரு பயணமாகவே இது தெரிகின்றது. ஒரு அரசாங்கத்தை அமைக்கின்ற வீரியம் அவர்களின் செயல்பாட்டில் தெரியவில்லை.

சிறுபான்மைச் சமூகங்களைப் பொருத்த வரை அவர்கள் வடக்கு கிழக்கில் மோதுவது தமிழ் மக்களுக்கு உரிமைகளையோ தமது கனவுகளை அடைவதற்காக கோசங்களை முன்வைத்து அல்ல. தமிழ் பிரதேசங்களில் பதவியில் இருந்தவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் அவர்கள் தலைமைத்துவத்தக்குப் பொறுத்தமில்லாதவர்கள். எனவே எங்களுக்கு அதிகாரத்தைத் தாருங்கள் நாங்கள் முயன்று பார்க்கின்றோம் என்றுதான் மாற்று அணி உச்சரித்துக் கொண்டுவருகின்றார்கள். ஆளும் தரப்பு சார்ப்பில் களத்தில் இருப்பவர்கள் என்னதான் நீங்கள் இவர்களுக்கு வாக்குப்போட்டாலும் அகப்பை எங்கள் கைகளில்தான் இருக்கின்றது என்று ஒரு அதிகார தோரணையில் அவர்கள் அங்கு கதை விடுகின்றார்கள்.

வழக்கமான அதிகாரங்களை வைத்திருப்போர் தமது பழைய சகாக்களான ரணில், சஜித் பற்றிப் பெரிதாக உச்சரிப்தில்லை. யாரு பதவிக்கு வந்தாலும் அவர்களுடன் பேசி ஏதையாவது மக்களுக்குச் செய்கின்றோம், சர்வதேசத்துடனும் தொடர்ப்பில் இருக்கின்றோம், எங்களை வாக்காளர்கள் மறந்து விடக் கூடாது என்பது அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. பொதுவாக சம்பந்தன் அணி விக்கி அணி விவகாரத்தில் மிகுந்த பீதியில் இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.

முஸ்லிம் அரசியலை எடுத்துக் கொண்டால் அங்கு ஒரு சோம்பல் நிலை காணப்படுகின்றது. பொதுவாக பெரும்பாலானவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்;படுகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்று எதிரணியில்தான் நிற்க வேண்டி இருக்கின்றது என்ற நிலை இருக்கின்றது. அதனால் அரசியல்வாதிகள் எந்த வாக்குறுதிகளையும் முன்வைத்து அங்கு அரசியலை முன்னெடுக்கவில்லை. தெற்கிலும் அவர்கள் இதே நிலை.

நாம் ஒன்றை மட்டும் அடித்துச் சொல்கின்றோம் தேர்தலுக்குப் பின்னர் தனித்துவக் கட்சிகளிலிருந்து ஆளும் தரப்புக்குத் தாவ பலர் உயில்களை ஏற்கெனவே எழுதிவிட்டார்கள். இதனை அந்தக் கட்சித் தலைமைகளும்; தெரிந்துதான் வைத்திருக்கின்றது. எனவே கூண்டோடு தாவலுக்கும் தலைவர்கள் தயாராகத்தான் இருக்கின்றார்கள். வாய்ப்பு வரும் போது அதுவும் நடக்கும். எனவே உப்புச் சப்பில்லாத சிறுபான்மையினரின் அரசியல் நகர்வுகளைத்தான நாம் அரங்குகளில் பார்க்க முடிகின்றது.

தமக்கு சதகமில்லாத களநிலவரம் இருப்பதால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் புதிய பல யுக்திகளைத் தற்போது வடிவமைத்து வாக்குக் கொள்ளைக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இளசுகளுக்கு விருந்துகளை ஏற்பாடு செய்வதும் அவர்களுக்கு விளையாட்ட உபகரணங்களைக் கொடுப்பதும் என்று பெரும் தொகையான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கண்டியில் பார்க்க முடிகின்றது.

குருனாகலையில் தொலைபேசில் போட்டியிடுகின்ற பெரும்பான்மை இன வேட்பாளர் ஒருவர் முஸ்லிம் கிராமங்களிலுள்ள முக்கியஸ்தர்களை அழைத்து இரவு விருந்துபசாரம் வழங்கி வருகின்றார். அங்கு தாராளமாக மதுபானம் பறிமாறப்பட்டிருக்கின்றது. முஸ்லிகள் அதனைத் மூக்கு முட்டப் பாவித்திருக்கின்றார்கள். அதனைப் பார்த்த பெரும்பான்மையினர் முஸ்லிம் சமூத்தில் இந்தளவு மதுப் பழக்கம் இருக்கின்றதா என்று வியந்து போகும் அளவுக்கு நிலை. ஏன் தனித்துவம் பேசுகின்ற தலைமைகள் கூட இந்தக் காரியத்தை கடந்த தேர்தலில் செய்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

இது இப்படி இருக்க மலையகத்தில் மட்டும் ஆளும் தரப்புக்கும் எதிரணியினருக்கும் ஓரளவு சம பல போட்டி நிலை இருக்கின்றது என்பதை நமக்குப் பார்க்க முடிந்தது. செஞ்சட்டைக் காரர்கள் கூட இன்னும் உணர்வுபூர்வமாக களத்தில் இறங்காமல் இருக்கின்றார்கள். இது ஏன் என்று புரியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் பார்த்த உற்சாகத்தை அவர்களிடம் பொதுத் தேர்தலில் காணமுடியவில்லை.

நன்றி: தினக்குரல்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post