
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளில் ஒருவரான இன்ஷாப் அஹமட் தொடர்பிலான விவகாரம் குறித்தே, வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் கட்டாயம் ஆஜராக வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அழைக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரிஷாத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேர்தல் ஆணையாளர் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலின் பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமது தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக, அம்பாறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோதே இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்பியடிக்கும் நோக்கிலேயே இவ்வாறு அடிக்கடி அழைப்பாணைகள் விடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 09ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 10 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் மூன்று தினங்களின் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வருமாறு கோரப்பட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு மாற்றமாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.