அங்குலானை துப்பாக்கிச்சூடு; 03 பொலிஸார் பணி நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அங்குலானை துப்பாக்கிச்சூடு; 03 பொலிஸார் பணி நீக்கம்!

மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்குலானை பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜென்ட், பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோரே இன்று (12) முதல்  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய கல்கிஸ்ஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (10)  இரவு 11.45 மணியளவில் மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில், அங்குலானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரினால், திடீரென வீதித் தடை ஏற்படுத்தி வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதன்போது, 02 முச்சக்கரவண்டிகளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்திய வேளையில், முச்சக்கரவண்டியில் வந்தவர் அத்துமீறி செயற்பட்டதன் காரணமாக,  பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த குறித்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவையைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவரான 04 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்தின்போது, மகனும், அவரது சகோதரனும் குறித்த முச்சக்கர வண்டியில் இருந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை நேற்று (11)  களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

தலையில் துப்பாக்கிச் சூடு பட்டதன் காரணமாக மரணம் இடம்பெற்றுள்ளதாக, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஆயினும், சம்பவம் நடந்த இடத்திலிருந்து மரணமடைந்தவரின் சகோதரர் இது குறித்து தெரிவிக்கையில், பொலிஸார் மூவரும் போதையில் இருந்ததாகவும், அவர்கள் தங்களிடம் முச்சக்கரவண்டி ஆவணங்களை கோரியதாகவும், இதன்போது குறித்த ஆவணம் செல்லுபடியற்றது என தங்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அதில் ஒரு பொலிஸார் மரணமடைந்த நபரை தாக்க முற்பட்டதாகவும், அதன்போது தங்களை தாக்க எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பதிலுக்கு அவரை தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் எல்லோர் மீது சுட ஆரம்பித்ததாகவும், குறித்த நபரின் மகனான சிறுவன் ஒருவனும் தம்முடன் இருந்ததாகவும், அதனையும் பொருட்படுத்தாது அச்சிறுவன் மீதும் துப்பாக்கிச்சூடு நடாத்தியதாகவும் சிறுவன் உள்ளிட்ட ஏனையோர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பொலிஸாரால் 06 முறை தங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு தீர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், நேற்றிரவு அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் எவ்வித பாரபட்சமும் இன்றி விசாரணை நடாத்தப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

நாளையதினம் (13) மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மரண விசாரணையில் சாட்சியம் வழங்குவதற்காக, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

-தினகரன்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.