
இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் அவர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் : "தலைப்பிறை பார்த்தலும் தீர்மானித்தாலும், முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடுத்தும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக மாற்றுவது" என குறிப்பிட்டிருந்தார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் பின்வரும் 03 தீர்மானங்களை ஏகமனதாக மேற்கொண்டனர்.
1. தலைப்பிறை பார்ப்பது மற்றும் அது பற்றிய தீர்மானம் எடுப்பது மற்றும் அதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தில் தோன்றும் சர்ச்சைகளை நீக்கும் வகையில் அதற்கான நியமங்களையும் வழிகாட்டல்களையும் உள்ளடக்கியதாக கைநூல் (Protocols) தயாரிக்கப்பட வேண்டும். அதுபற்றிய நகல் (Draft) ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகளால் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து திணைக்களம் அது பற்றிய கலந்துரையாடல்களை நடாத்தி இறுதியாக கைநூல் முடிவு செய்யப்படும்.
2. பிறை பார்த்தல் மற்றும் தீர்மானித்தல் மற்றும் அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்ற விடயங்களில் திணைக்களம் பூரணமாக தன்னை ஈடுபடுத்தி பிறைக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.
இதன் முதற்படியாக இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிரதிநிதிகளால் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு ஏற்கனவே ஒரு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திணைக்கள உத்தியோகத்தர்கள் இது விடயத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள் அத்துடன் ஜூலை 21 ஆம் திகதி பிறை பார்க்கும்போது பிறை குழுவின் பிராந்திய குழுக்களோடு திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து கொள்வார்கள்.
3. ஜூலை 21 ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூட இருக்கும் துல்ஹஜ் தலைப்பிறை தீர்மானிப்பதற்கான மாநாட்டு நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இணைந்து திணைக்களத்தின் முகநூல் பக்கத்தின் ஊடாக நேரலை செய்யப்படும்.