தேசிய வைத்தியசாலை கொள்ளை; கைது செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி மீது சந்தேகம்!!

தேசிய வைத்தியசாலை கொள்ளை; கைது செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி மீது சந்தேகம்!!

varuni bogawatta sri lanka police
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்காளர் பிரிவிலிருந்து, வைத்தியசாலை ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய மேலதிக நேர கொடுப்பனவு பணமான, 79  இலட்சம் ரூபாவுக்கும்  அதிக பணம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட வைத்தியரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், இன்று (10) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

விளையாட்டு துப்பாக்கியொன்றை பயன்படுத்தி, தேசிய வைத்தியசாலையில் கணக்காளர் பிரிவில் காசாளரை அச்சுறுத்தி, சந்தேகநபர் நேற்று (09) பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்காளர் பிரிவிலிருந்து 79 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை கடத்தியதாகக் கூறப்படும் வைத்தியர், குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நீண்டகாலமாகவிருந்து திட்டம் தீட்டியதாக  தெரியவந்துள்ளது.


இதனுடன் தொடர்புடைய ஆவணங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபரான வைத்தியர், தற்போது வரை மருதானை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, அவருக்கு ஏதாவது மனநலக் குறைபாடு உள்ளதா என்று ஆராயவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த பணத்தை இவ்வாறு கொள்ளையடித்துக் கொண்டு, அவர்  முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவத்திற்காக அவர் செயற்கை தலைமுடியை அணிந்திருந்துள்ளார்.

எவ்வாறாயினும், மற்றுமொரு முச்சக்கரவண்டியில் அரச புலனாய்வு பிரிவின் பயிலுனர் அதிகாரிகள் இருவர், சந்தேகநபரை பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.

அவ்வேளையில் அங்கு வந்த மாத்தறை பிரிவுக்கான சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவும், சந்தேகநபரை கைது செய்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் பயிலுனர் அதிகாரிகளுக்கு உதவியுள்ளார்.

எவ்வாறாயினும், மாத்தறை பிரிவுக்கான சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த, குறித்த சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர் தனது உத்தியோகபூர்வ சீருடையில் அங்கு வந்துள்ளதோடு, அவருடன் அவரது மகளும் வாகனத்தில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்கொள்ளைச் சம்பவம், குறித்த வைத்தியரினால் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதா அல்லது, குழுவாக மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது செயற்பாடு தொடர்பில் பாராட்டிய போதிலும் அவர் அங்கு வந்தமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post