"தெமட்டகொடை வீட்டில் குண்டு வெடித்தபோது வீட்டில் இருந்த எவருமே அதிர்ச்சியடையவில்லை!" பொலிஸ் சார்ஜன்ட் சாட்சியம்! (வீடியோ இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

"தெமட்டகொடை வீட்டில் குண்டு வெடித்தபோது வீட்டில் இருந்த எவருமே அதிர்ச்சியடையவில்லை!" பொலிஸ் சார்ஜன்ட் சாட்சியம்! (வீடியோ இணைப்பு)

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களில் ஓர் அங்கமான தெமட்டகொடை – மஹவில கார்டன் வீட்டில் பெண் தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்தபோது, அவ்வீட்டில் இருந்த இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட எவரும் அதிர்ச்சியடையவில்லை என பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

குண்டை அந்தப் பெண் வெடிக்கச் செய்ய முன்னர் பொலிஸார் அங்கு சென்றபோதும் அவ்வீட்டிலிருந்த பல பெண்கள் அழுது கொண்டிருந்ததாகவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் தர உத்தியோகத்தரும் தற்போது வத்தளை பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்டாக கடமையாற்றுபவருமான வசந்த சிசிர குமார சாட்சியமளித்தார்.

இதன் மூலம் குறித்த தற்கொலைத் தாக்குதல்கள், தொடர்பிலான தகவல்களை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்திருக்கலாம் என தனக்கு எண்ணத் தோன்றுவதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்று (03) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இதன்போது 406 ஆவது சாட்சியாளராக ஆணைக்குழு முன்னிலையில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதிகளின் நெறிப்படுத்தலில் சார்ஜன்ட் வசந்த சிசிர குமார சாட்சியமளித்தார்.



தெமட்டகொடை - மஹவில கார்டனில் குறித்த வீட்டுச் சூழலில் காணப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காணப்பட்ட நிலைமை தொடர்பாக மனிதப் படுகொலைகள் விசாரணைப் பிரிவின் பெண் உப பொலிஸ் உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய CCTV காட்சியில்…

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது சாட்சியமளித்த சார்ஜன்ட், வசந்த சிசிர குமார, ‘கடந்த 2016 முதல் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நான் சேவையாற்றி வந்தேன். கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி காலை வழமை போன்று நான் கடமைக்கு சமூகமளித்தேன். அப்போது நாட்டில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தன.

இவ்வாறான பின்னணியில், CCTVயின் நிர்வாக பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் களுபான என்னை உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டாரவுடன் சுற்றிவளைப்பு ஒன்றுக்குச் செல்ல ஆலோசனை வழங்கினார். அதன்படி சிவில் உடையில் உடனடியாக நாம் செல்லத் தயாரானோம்.

அதன்படி நாம் ஆறு பேர் லேன்ட் குறூஷர் வாகனத்தில் சென்றோம். உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டாரவிடம் மட்டும் அவரது கடமை நேர கைத்துப்பாக்கியும் 10 தோட்டாக்களும் இருந்தன. அதனைவிட கைவிலங்குகளையும் நாம் அவரது ஆலோசனைக்கமைய எடுத்துக் கொண்டோம்.

நாம் வீடு ஒன்றுக்கே சுற்றிவளைப்புக்குச் செல்கிறோம் என்பது தெரிந்தது. எனினும் அங்கு நாம் குண்டுகளை அல்லது வெடி பொருட்களை தேடிச் செல்கின்றோம் எனத் தெரியவில்லை. அப்படி நினைத்துக் கூட பார்க்கவில்லை. சட்ட விரோத பொருட்கள் அல்லது குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரேனும் மறைந்துள்ளமை தொடர்பில் வீட்டை சோதனை செய்யப் போவதாகவே நாம் எண்ணினோம்.

தெமட்டகொட மஹவில கார்டின் வீதியில் உரிய வீட்டு இலக்கத்தை, அவ்வீட்டின் மதிலில் பொறிக்கப்பட்டிருந்த பலகையில் இருந்து அடையாளம் கண்டோம்.

முதலில் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார சென்று வீட்டில் பிரதான வாயிலை தட்டினார். நாம் பின்னே இருந்தோம்.

அப்போது சற்று வயதான ஒருவர் வந்து வாயிலைத் திறந்தார். பின்னர் அவர்தான் இப்ராஹீம் ஹாஜியார் என அறிந்து கொண்டேன்.

அங்கு மேலும் இரு ஆண்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் சோதனை செய்யுமாறு உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார எம்முடன் வந்த கான்ஸ்டபிள் பெரேராவுக்கு பொறுப்புச் சாட்டினார்.

பின்னர் நாம் உள்ளே செல்லும்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்கு ஹெட்டி, இப்ராஹீம் ஹாஜியாரை விசாரித்துக் கொண்டிருந்தார். நாம் மேல் மாடி நோக்கி செல்லலானோம்.

அப்போது இருபடிகள் ஏறிய பின்னர் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார, என்னை நோக்கி கீழ் தளத்தில் சில பெண்கள் இருப்பதாகவும் அவர்களைச் சோதனை செய்யுமாறும் கூறி விட்டு துலஞ்சன, பண்டார ஆகிய சக உத்தியோகத்தர்களுடன் அவர் மேல் தளத்துக்கு சென்றார்.

நான் கீழ் தளத்தில் ஓர் அறையில் சில பெண்கள் இருப்பதையும் சமயலறையில் மேலும் சில பெண்கள் இருப்பதையும் அவதானித்து அவர்களை ஒரு இடத்தில் ஒன்று சேர்த்தேன். அப்போதும் அவர்களில் சிலர் அழுது கொண்டிருந்தை நான் அவதானித்தேன்.

எனினும் மேல்மாடிக்கு சென்ற ரோஹண சேர் தலைமையிலான மூவருக்கும் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. நான் ரோஹண சேர் என பலமாகக் கத்தி கத்திக் கூப்பிட்டேன். எந்தப் பதிலும் இல்லை. வீடு முழுக்க புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயும் பரவியது.

அதனால் நான் உடனடியாக எனது நிர்வாக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு மேலதிக படையினரை அனுப்புமாறும், வெடிப்பு இடம்பெற்றதையும் கூறினேன்.

அதன் பின்னர் 10 நிமிடங்களுக்குள் அதிரடிப்படை, இராணுவம், தீயணைப்பு படை என அனைவரும் வந்தனர். அப்போதும் மேல் மாடி நோக்கி யாராலும் செல்ல முடியவில்லை.

இதனிடையே மின்சாரத்தைத் தடை செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சர் லொக்கு ஹெட்டி, இப்ராஹீம் ஹாஜியாரை அழைத்துச் சென்றார். மேலே செல்வது சாத்தியமற்று காணப்பட்ட நிலையிலேயே மின்சார இணைப்பைத் தடை செய்ய அவர் அவ்வாறு முயன்றார்.

இவ்வாறான நிலையில், முதல் வெடிப்பு பதிவாகி 15 – 20 நிமிட இடைவெளியில் மீளவும் ஒரு வெடிப்புச் சப்தம் கேட்டது. அப்போதும் நாம் வெளியே ஓடி வந்தோம்.

அதன் பின்னர் அதிரடிப் படையினர் வீட்டின் மற்றொரு பகுதி ஊடாக ஏணி ஒன்றின் உதவிடன் உள்நுழைந்தனர்.
அப்போது எமது 3 சக உத்தியோகத்தர்களையும் காணவில்லை.

இந்நிலையில், நாம் மேல்மாடிக்குச் சென்று தேடும்போது, சுவர் ஒன்று முற்றாக இடிந்து மண், கல் உள்ளிட்டவற்றால் நிறைந்திருந்திருந்ததை அவதானித்தோம்.

அப்போது ரோஹன சேரின் கால் தெரிந்தது. உடனடியாக மண்னை அகற்றி பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவருக்கு அருகே துலஞ்சன உட்பட ஏனைய இரு அதிகாரிகளும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.

அந்த வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டோரை விசாரணைக்காக சி.ஐ.டி.யினரிடம் கையளித்தோம்.’ என சாட்சியமளித்தார்.

இந்நிலையில் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் விசாரணைப் பிரிவின் பெண் உப பொலிஸ் உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய CCTV காணொளிகள் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்பட்டு மேலதிக சாட்சிகள் சார்ஜன்ட் வசந்த சிசிர குமாரவிடம் பதிவு செய்யப்பட்டது.

-Virakesari

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.