COVID-19 தொற்று நோய்க்கெதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த கனடா நிதி உதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

COVID-19 தொற்று நோய்க்கெதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த கனடா நிதி உதவி!

உலகளாவிய தொற்று நோய் சூழலிலும் அத்தியாவசிய சேவைகளான பால்நிலை சார் வன்முறை மற்றும் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் சார் சேவைகளை, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பெண்கள் மற்றும் சிறுமியர் அணுகி பெற்றுக்கொள்ளக்கூடியதை உறுதி செய்ய, கொழும்பில் உள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அதி மேதகு டேவிட் மெக்கினோன் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரிட்சு நெக்கென் கனேடிய டொலர் 400,000 க்கான நிதி உதவி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

சுகாதார அமைச்சு மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்த புதிய நிதியானது வீட்டு வன்முறைகளிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களை ஆதரிக்கும் வைத்தியசாலை பராமரிப்பு நிலையங்களினுடைய செயற் திறனை மேம்படுத்துவதற்கும், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிராக ஊடக பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கும், கர்ப்ப கால சுகாதாரத்திற்கான மருத்துவ உபகரண கொள்வனவு மற்றும் தொற்றுநோய் சூழலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்படக்கூடிய சமூக-பொருளாதார தாக்கம் பற்றிய ஒரு பகுப்பாய்வை நடாத்தவும் பயன்படுத்தப்படும்.

கனேடிய அரசாங்கம் சார்பில் பேசிய அதி மேதகு டேவிட் மெக்கினோன் குறிப்பிடும் போது, “தொற்று நோயின் ஒரு கவலைக்குரிய பரிமாணம், செயற்படுகளின் முடக்கம் மற்றும் பொருளாதார அழுத்தம் போன்றவற்றுடன் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறையும் இணைந்து காணப்படுவதாகும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவினையும் உதவியையும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி திருமதி ரிட்சு நாக்கென், “COVID 19 ற்கு எதிரான நடவடிக்கைகளில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் பெரும்பாலும் வெவ்வேறு தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தொடர்ச்சியான ஆதரவளிக்கிறது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேவைகள் இவ்வைரஸ் தடுப்பு நடவடிக்கை முயற்சிகளின் மையமாக அமைய வேண்டும்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

இந்த தொற்றுநோய்ச் சூழல் இலங்கையின் ஒவ்வொரு துறைகளிலும் ஏற்கனவே காணப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான சமத்துவமின்மைகளை மோசமாக்குகின்றது. அத்துடன் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உயிர் காக்கும் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகளின் அணுகலை கடுமையாக பாதித்திருக்கின்றது. மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகமாக தேவைப்படும் நேரத்தில் இந்நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களின் செயற்திறனிலும் இது தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

நிலைப்பேரான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் அடிப்படையான "ஒருவரும் பின் தள்ளப்படக்கூடாது" என்ற கொள்கை முன்னரை விட தற்போது மிகவும் பொருத்தமாக காணப்படுகிறது.

பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம், பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்காண பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஐ.நா.வின் முன்னணி நிறுவனமான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் உலகளாவியளவில் மூன்று பிரதான மாற்றத்திற்கான இலக்குகளை அடைவதற்காக பணியாற்றுகின்றது. அவையாவன : 2030ம் ஆண்டளவில் தடுக்கப்படக்கூடிய பிரசவத்தின் போதான தாய் மரணங்களை பூஜ்ஜியமாக்கல், குடும்பக் திட்டமிடலுக்கான பூர்த்தி செய்யப்படாத தேவையை பூஜ்ஜியமாக்கல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை பூஜ்ஜியமாக்கல்.

தொற்றுநோய் சூழ்நிலைமையின் போது இந்த முயற்சியை துரிதப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அதன் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்நிதி உதவியானது கனடாவின் பெண்ணிய சர்வதேச உதவிக் கொள்கையின்படி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இலங்கை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்திற்கு கனடாவினால் ஏற்கனவே வழங்கப்படும் ஆதரவினை மேலும் வலுப்படுத்த்துகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.