இலங்கையில் பள்ளிவாசல்களை திறப்பதற்கான முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சுற்றுனிறுபம் வெளியானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பள்ளிவாசல்களை திறப்பதற்கான முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சுற்றுனிறுபம் வெளியானது!!

மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பள்ளிவாசல்களும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன் திறக்கப்படும்.

ஜும்ஆ தொழுகை மற்றும் கூட்டு வழிபாடுகளுக்கு அனுமதியில்லை என முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பள்ளிவாயல்களை மீளத் திறப்பது சம்பந்தமாக இலங்கை வக்ப் சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள சுற்று நிருபத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வணக்கஸ்தலங்கள் தொடர்பாக 27.05.2020 திகதியிட்ட சுகாதார அமைச்சின் இறுக்கமான வழிகாட்டல்களின் படி இலங்கை வக்ப் சபை கீழ் வருமாறு தீர்மானித்துள்ளது,

சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பிரகாரம் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளதன் அடிப்படையில், மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சகல பள்ளிவாசல்களும் வக்ப் சபையின் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும். 

(மட்டுபடுத்தப்பட்ட பகுதி காலத்துக்கு காலம் சுகாதார அமைச்சினால் தீர்மானிக்கப்படுவதால் உங்கள் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி (ஆழுர்) அல்லது பொது சுகாதார வைத்திய பரிசோதகர் (PHI) மூலம் அறிந்து கொள்ளலாம்.)

ஏனைய பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வரையறைகளுக்குப்பட்டவாறு எதிர்வரும் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் தனிநபர் தொழுகைக்காக திறக்கப்படும்.

பள்ளிவாசல்களை மீளத் திறப்பதற்கு முன்னர் சகல தர்மகர்த்தாக்களும் அல்லது பொறுப்புதாரிகளும் பள்ளிவாசல்களையும் அதன் வளாகத்தினையும் பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் முழுமையாக சுத்திகரிப்பு (தொற்று நீக்கம்) செய்யப்பட வேண்டும். மேலும் பள்ளிவாசலினுள் நுழைவதற்கு ஒரு நுழைவாயிலுக்கு மட்டுப்படுத்த வேண்டும்.

அத்துடன் ஒவ்வொரு தொழுகையாளிக்கும் இடையில் தரையில் ஒரு மீட்டர் இடைவெளியை (தொழ அனுமதியற்ற பகுதியாக) தர்மகர்த்தாக்கள் அல்லது பொறுப்பாளிகள் அடையாளமிடல் வேண்டும். அதேபோன்று பள்ளிவாசல் நுழைவாயிலில் கைகளை கழுகுவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் திறக்கப்பட்டு, தொழுகையைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்படவேண்டும்.. மீண்டும் லுஹர் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்பட வேண்டும்.

மேலும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கமைய வழமையான அல்லது விஷேட கூட்டுத்தொழுகைகள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஆகவே, ஐவேளை இமாம் ஜமாஅத், ஜும்ஆத் தொழுகை மற்றும் ஏனைய கூட்டுத் தொழுகைகள் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்பட மாட்டாது. 

தொழுகைக்கு ஒரு நேரத்தில் 30 பேர் அல்லது அதை விட குறைவானர்கள் மட்டுமே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவர். பள்ளியினுள் இருக்கின்ற போது ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்திருப்பதோடு ஒரு மீட்டர் பௌதீக இடைவெளியையும் பேண வேண்டும். பள்ளிவாசலில் வுழூச் செய்யும் பகுதி,  மலசல கூடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும். ஆகவே, பள்ளிவாசலுக்கு வரும் அனைவரும் தத்தமது இருப்பிடங்களில் வுழுச் செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் தரை விரிப்பு (கார்பட்) போடப்பட்டுள்ள பள்ளிவாசல்களில் அதன் மீது தொழுவது அனுமதிக்கப்படாது. மாறாக, கார்பட் இல்லாத ஒரு இடத்தில் தொழ வேண்டும். பள்ளிக்கு வருகின்ற ஒவ்வொருவரும் தங்களுக்கென தொழுகை விரிப்பொன்றை (முஸல்லாஹ்) எடுத்து வருவதோடு, பள்ளியிலிருந்து வெளியேறும் போது அதனைத் தன்னோடு எடுத்துச் சென்று விட வேண்டும்.

பள்ளிவாசலுக்கு வருகின்ற ஒவ்வொருவரும் சுகாதாரத் துறை மற்றும்  பாதுகாப்பு துறையினால் கொவிட் 19 தொடர்பாக வழங்கப்படுகின்ற வழிகாட்டல்களையும் பணிப்புரைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையினரால் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போது இலங்கை வக்ப் சபை அது தொடர்பான மேலதிக பணிப்புரைகளை வழங்கும்.

எனவே பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள் அல்லது பொறுப்புதாரிகள் மற்றும் பள்ளிவாசலுக்கு வரும் பொதுமக்கள் மேலே தெரிவிக்கப்பட்ட வரையறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதற்கு பணிக்கப்படுகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.