வெள்ளை வேன் விவகார நீதிமன்ற விசாரணை நிறைவு; சந்தேக நபர்களுக்கு பிடியாணை உத்தரவு!

சர்ச்சைக்குரிய ‘வெள்ளை வேன்’ ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். 

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேயின் முன்னிலையில் இன்று பிடிவிறாந்து(26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்ஜீவ மதநாயக ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையை தொடர்ந்து, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சரத் குமார மற்றும் அதுல சஞ்ஜீவ மதநாயக ஆகியோர் கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பான வழக்கில், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுவதாக, நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

ஆயினும், குறித்த விடயத்தை உறுதிப்படுத்த சந்தேக நபர்களின் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகாமையை தொடர்ந்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மூன்றாவது மற்றும் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post