மாளிகாவத்தை முஸ்லிம்களின், தலைவிதி மாற்றப்பட வேண்டும்!

தமிழ் - சிங்கள சமூகங்களுடன் இணைந்து வாழ்வதில் இன்றும் வெற்றி கண்ட மாளிகாவத்தை முஸ்லிம்களின் எதிர்காலம் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேள்விக்குறிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது...

"மாளிகாவத்தையின் இன்றைய வெறுமையான சூழ்நிலைக்கு வறுமை மாத்திரம் காரணம் அல்ல.."

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்திலேயே ஒரு மாணவனாக மாத்திரமன்றி,கொழும்பு ஸாஹிறாக்கல்லூரியின் உயர் தர வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த சூழ்நிலையிலும், பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த வேளையிலும் ,சமூகத்தின் ஒரு பங்காளியாக,கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக்களத்தில் இருந்தவனாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

கடந்த வியாழக்கிழமை (21) மாளிகாவத்தையில் நிகழ்ந்த துர்ப்பாக்கியமான சம்பவம் இன்று பலரையும் பேசவைத்துக் கொண்டிருக்கின்றது.

இருந்த போதிலும்,

மாளிகாவத்தை முஸ்லிம்களின் தீர்க்கப்படாத கல்விப்பிரச்சினைகள்.....

முஸ்லிம்களுக்கு எதிரான பொலீஸ் அராஜகங்கள்....

போதிரஜாராமை வீதியில் மத்ரஸாவுக்கு எதிரான இனவாதத்தாக்குதல்கள்.....

மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்ட விவகாரங்கள்...

முஸ்லிம் இளைஞர்கள் பாதாள உலகத்தலைவர்களாக மாறிய அல்லது மாற்றப்பட்ட கதைகள்..

ஒவ்வொரு தேர்தல்கள் நடக்கும் பொழுதும் இவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளாலேயே தவறாக வழி நடத்தப்பட்டும்,போஷிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்ட சூழ்நிலைகள்...

தேர்தல்களுக்கு பின்னால் எல்லா அரசியல் கட்சிகளினாலும்,பிரதிநிதிகளாலும் கைவிடப்பட்ட அரசியல் அனாதைகள்... மாளிகாவத்தை முஸ்லிம்கள்.

மாளிகாவத்தைப்பிரதேசத்தில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டிப்பறந்த ஆங்கில டென்ஹாம் பாடசாலையின் மறு வடிவமான ,தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், பாதாள உலகத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, தகுதிவாய்ந்த அதிபர்கள்,ஆசிரியர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்கள் .

படித்த இளைஞர்கள் தேவை தேவை என்று சொல்லிச்சொல்லியே, பள்ளிக்கூடம் பக்கம் போகாதவர்களையும்,பாதாள உலகத்தினர்கள் கைகாட்டியவர்களையும் மாளிகாவத்தை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளாக இன்றுவரை கொண்டிருக்கும் யதார்த்தம்...

படித்த ,பண்பான இளைஞர்கள் அரசியலுக்கு வருவதில் காட்டும் அச்சங்கள்…..

பட்டதாரிகள் ,பேராசிரியர்கள் என்று பேர் எடுத்தவர்கள் மாளிகாவத்தை என்று சொல்வதில் காட்டும் கூச்சங்கள்..

படித்த ,சமூக உணர்வுள்ள இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளையும், பொறுப்பு க்களையும் ஒப்படைக்காமல், வியாபார நிறுவனங்களைப்போல் இயங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் இயக்கங்கள்....

தெரிந்தும் ,தெரியாதது போல் எல்லோரும் நடித்துக்கொண்டிருக்கும்சூழ் நிலையில்,இன்றைய இளைஞர்களைப்பாதித்துகொண்டிருக்கும் புதிய ரக "ஐஸ்" போன்ற போதைவஸ்துக்களின் பாவனைகள் .

மாளிகாவத்தை முஸ்லிம்களின் தலைவிதியை மாற்றத்துடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், யதார்த்தவாதிகளுக்கும் இடம்கொடுக்காமல் ,விழித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு...இன்றும் மாளிகாவத்தை முஸ்லிம்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு அமானிதத்தை சுமந்துகொண்டிருக்கின்றோம் என்பதை மாளிகாவத்தை முஸ்லிம்கள் இன்றைய காலகட்டத்தில் சிந்தித்து முடிவு எடுக்காதவரை,இன்னும் 25 ஆண்டுகள் பின்னோக்கியவர்களாகவே நாங்கள் வாழப்போகின்றாம் என்பதை யாரலும் நிராகரிக்க முடியாது.

எல்லாம் வல்ல இறைவனின் பேரால்…….எழுதுவதோடும்,பேசுவதோடும் இல்லாமல்,

மாளிகாவத்தை முஸ்லிம்களின் தலைவிதியை மாற்றக்கூடிய ஓர் இளைஞர் கூட்டத்தை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம்...

எவர் தூற்றினாலும் -போற்றினாலும் - சமூக மாற்றத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும்.இன்ஷா அல்லாஹ்.

மாளிகாவத்தை மண்னின் மைந்தன்
"இளநெஞ்சன்"முர்ஷிதீன்

-Jaffna Muslim

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post