கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து எப்போது தீர்வு கிடைக்கும்? எத்தனை நாட்கள் இது நம்முடன் இருக்கும்? உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த அனைத்து கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை எதையும் யாராலும் உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும் ஆய்வு பணிகளை மிக வேகமாக நடத்தி வருகின்றன. தற்போதைய சூழலில் எந்த நாடு முதலில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கிறதோ அந்த நாடு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என பல ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்குள் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை சீனா தான் முதலில் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நப்தாலி பென்னட் கூறுகையில், 'பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான ஐ.ஐ.பி.ஆர் உருவாக்கியுள்ள மோனோக்ளோனல் நியூட்ரலைசிங் ஆன்டிபாடி, நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கரோனா வைரஸை அழிக்கக்கூடியது. இந்த மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு காரணமான இந்நிறுவன ஊழியர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையைக் கொண்டு வந்தது' எனக் கூறினார்.
மேலும், இந்தத் தடுப்பு மருந்துக்கு விரைவில் காப்புரிமை பெறப்படும் என ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இந்த மருந்து உற்பத்தியைத் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Dailyhunt

