
ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கள், முதல் அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட காவல்துறை பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுதல் மற்றும் தளர்த்தப்படுதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கள், காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
அதன் பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும் வரை இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை நடைமுறையில இருக்கும்.
கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவதுகொடை, அகுரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று காவல்துறை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏனைய காவல்துறைப் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் - ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கள், முதல் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் - பின்வரும் காவல்துறைப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 22ஆம் திகதி, புதன், முதல் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் காவல்துறைப் பிரிவுகள் வருமாறு,
கொழும்பு மாவட்டம்: கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலபிட்டி, வாழைத்தோட்டம், மரதானை, கொதடுவ, முல்லேரியா, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை மற்றும் கொஹுவலை.
கம்பஹா மாவட்டம்: ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை
புத்தளம் மாவட்டம்: புத்தளம், மாரவிலை மற்றும் வென்னப்புவை
களுத்துறை மாவட்டம்: பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கமை
இந்த வகையில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலபிட்டி, வாழைச்சேனை, மரதானை, கொதடுவை, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை, கொஹுவலை, ஜாஎலை, கொச்சிக்கடை, சீதுவை, புத்தளம், மாரவிலை, வென்னப்புவை, பண்டாரகமை, பயாகலை, பேருவளை, அளுத்கமை, வரகாபொல, அகுரணை, அலவதுகொடை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் நோய்த்தொற்று அபாயத்துக்கு உள்ளாகக்கூடிய பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாகத் தடைசெய்யப்படும்.
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் காவல்துறைப் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாகப் பயணம் செய்யமுடியும்.
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் - பிரதான வீதிகளைத் தொழிலுக்காகச் சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.
மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் - திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும்.
கொழும்பு மாவட்டத்தின் உள்ளே, அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.
ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் எவர் எவர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த நிறுவனத் தலைவர்களுக்கு உண்டு
ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரைத் தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்.
அலுவலகங்களைத் திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவது நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.
தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் எவர் எவர் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
இந்த தனியார் நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்குச் சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்குச் சமூகமளிப்பது கட்டாயமானதாகும்.
பேரூந்து வண்டிகள், சிற்றூர்திகள் அல்லது தொடரூந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும்.
அனைத்து வாகனங்களும் கிருமித் தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிபந்தனை மற்றும் அறிவுறுத்தலுக்கு உட்பட்டுத் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளுகின்றது.
அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவை - மீண்டும் அறிவிக்கப்படும்வரை தடைசெய்யப்பட்டுள்ளன.
மக்கள் ஒன்றுகூடுவது நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் என்பதால் சமய விழாக்களையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா நோய்க்கிருமி பரவலுக்கு மத்தியில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களை இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது.
இதுவரை நாம் எல்லோரும் பின்பற்றிய கடுமையான வழிமுறைகளின் காரணமாக ஏற்பட்ட முன்னேற்ற நிலைமையினாலேயே ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு முடியுமாக இருக்கின்றது.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் இந்த நோய்த்தொற்றுப் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையைப் பாதுகாத்து மேம்படுத்துவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதன் மற்றுமொரு நோக்கமாகும்.
எனினும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே நோய்க்கிருமி பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்துச் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றிப் பொறுப்புடனும் பொறுமையுடனும் செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காகச் சென்றுவருவதைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் வீடுகளிலேயே இருந்துகொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் சென்று குவிய வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் பிரகடனப்படுத்தும்வரை உங்களுடையதும், உங்கள் பிள்ளைகளுடையதும், எமது நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக - அனைத்துச் சிரமங்களையும் இடர்பாடுகளையும் சகித்துப் பொறுத்துக்கொள்ளுமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றது.
-ஜனாதிபதியின் முகநூல்

