
இலங்கையின் வடகிழக்கின ஆறு பகுதிகளில் காணாமல் போனவர்களினது குடும்பத்தவர்களின் சார்பில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கையும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தை சந்திப்பொன்றிற்கு முன்னதாக காணாமல் போனவர்களின் தாய்மார்க ள் ஒவ்வொருவரிற்கும் ஆகக்குறைந்தது ஆறு தொலைபேசி அழைப்புகளாவது பல புலனாய்வு அமைப்புகளிடமிருந்து வந்துள்ளன என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசிகளில் தொடர்புகொண்டவர்கள் சந்திப்புகள் எங்கு இடம்பெறுகின்றன, யார் ஏற்பாடு செய்துள்ளனர் போன்ற விபரங்களை கோரியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களுடனான சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென கேள்வி எழுப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு செயற்பாட்டாளர் எங்களால் எந்த திட்டங்களையும் முன்னெடுக்க முடியவில்லை நாங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல வருடங்களாக பதிலுக்காக காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பாதுகாப்பு படையினர் காணாமல்போனவர்களின் உறவினர்களை அவர்களது கோரிக்கைகளை கைவிடுமாறு அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இந்த துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தி காணாமல்போனவர்கள் குறித்து விசாரiணைகளை மேற்கொண்டு உறவினர்களிற்கு நீதி வழங்குவதாக ஐநாவிற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் சிஐடியினர் தனது வீட்டிற்கு தொடர்ச்சியாக வந்து செல்வதாக 2009 இல் தனதுமகனை பறிகொடுத்த தாய் ஒருவர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு தெரிவித்துள்ளார்.
அவர்கள் என்னிடம் வந்து யார் சந்திப்புகளிற்கு செல்கின்றனர் என கேட்கின்றனர், என தெரிவித்துள்ள அவர் யார் ஜெனீவாவிற்கு செல்கின்றனர் எனவும் இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் எங்கள் வீடுகளில் இருந்து வெள்ளை வானில் இழுத்துச்செல்லப்பட்டவர்கள் அல்லது இராணுவத்தினரிடம் சரணடைநதவர்கள் எ தெரிவித்துள்ள அவர் இவர்களை பற்றியே நான் கதைக்கின்றேன், எனது மகனிற்கு என்ன நடந்தது என்பதை நான் அறிய விரும்புகின்றேன்,அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை அறிய முயல்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்
எனது மகன் உயிருடன் இல்லாவிட்டால் அவருக்கு என்ன நடந்தது?யார் அதனை செய்தார்கள், அவர் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது அடித்து முடமாக்கப்பட்டாரா என்பதையும் அறிய விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் வெளிப்படையான சூழ்நிலை காரணமாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் வெளிப்படையாக பேசுவதற்கு முன்வந்தனர் என தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் இதனால் தற்போது படையினருக்கு தங்களை பற்றி யார் கதைக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல் என்பது நீண்ட கால வரலாற்றை கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தினை சாதாரணமாக அலட்சியம் செய்வதற்கு அனுமதிக்ககூடாது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையை அதன் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்குமாறும் ஐக்கியநாடுகளிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுமாறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் பெப்ரவரியில் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கம் இதனை நிறைவேற்ற தவறினால் சர்வதேச விசாரணைகளிற்கு வழிவகுக்ககூடிய நடவடிக்கைகளை மனித உரிமை பேரவை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் காணாமல்போனவர்களின் உறவினர்களிற்கு தங்களின் குடும்பத்தவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி உண்மை தெரியவரும் நீதி கிட்டும் என அவர்களிற்கு சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை மாத்திரம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
-Virakesari.lk

