
இவ்வாறான சட்டவிரோத உடன்படிக்கை செய்துகொண்ட குற்றத்துக்காக எதிர்காலத்தில் செயற்படும் வகையில் ஹிஸ்புல்லாஹ்வின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க முடியும் எனவும் சபையில் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) பெட்டிகளோ கெம்பஸ் நிறுவனம் குறித்து ஜே.வி.பியின் உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளையின் பிரேரணையின் போது அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டில் இலாபம் பெறும் நோக்கில் இவ்வாறான தனியாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நல்ல உதாரணம் சைட்டம் நிறுவனமாகும். இதிலும் அரசியல் மற்றும் பண பலம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் பெட்டிகளோ கெம்பஸ் நிறுவனமும் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் மற்றும் பண பலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இதற்கான இடமும் மகாவலி பகுதியில் அபகரிக்கப்பட்டுள்ளது. 35 ஏக்கரை குத்தகைக்கு விடுவித்துள்ளனர். அதுவும் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு வருடத்துக்கு 5 இலட்சத்துக்கும் குறைவான தொகைக்கே குத்தகைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சவூதி அரபியாவில் இருந்து நிதியும் கோடிக்கணிக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்களுக்கு 35 ஏக்கர் கொடுத்தாலும் இவர்கள் அதற்கும் அப்பால் 8 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளனர். ஆகவே சட்டவிரோதமாக 8 ஏக்கர் கைப்பற்றியுள்ளதுடன் மேலும் 45 ஏக்கரை பெற்றுக்கொள்ள கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கான நிதி கிடைப்பதே பாரிய பிரச்சினை. சவூதியில் இருந்தே முழுப் பணமும் கிடைத்துள்ளது. ஆனால் இந்த நிதி கடனா நன்கொடையா என்று இவர்களால் கூறமுடியாது போயுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும் அவர்கள் உரிய காரணிகளை கூறவில்லை. முதலில் கடன் என கூறினாலும் இது கடன் அல்ல. இது கடனுக்கான முறையான பத்திரங்களை கொண்டு பெறவில்லை. பெற்றுக்கொண்ட கடனையும் எவ்வாறு செலுத்துவது என்பதை கூறவில்லை. ஆகவே நிதி வந்தமை குறித்து முறையான கடினமான விசாரணைகளை நடத்தியாக வேண்டும்.
இந்தப் பணம் சவூதியின் தடைசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூலமாக வந்துள்ளதாக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-Metro