
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் இரு சிக்ஸர்கள் அடங்களாக 29 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றார்.
135 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி முதல் 15 ஓவர்களில் மிக திறமையாக துடுப்பெடுத்தாடியது. லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சில் சிக்கிய தென் ஆபிரிக்க அணி கடைசி 5 ஓவர்களில் ஓட்டங்களை பெற தடுமாறியது.
இருப்பினும் போட்டியில் கடைசி பந்து வரை தீர்மானமிக்க போட்டியாக அமைந்தது. கடைசி ஓவரில் 5 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில், இசுரு உதான பந்து வீசினார். எட்டு விக்கட்டுக்களை இழந்து கடைசி பந்தில் இரு ஓட்டங்கள் என்ற கட்டத்திற்கு தென் ஆபிரிக்க அணி தள்ளப்பட்டது. கடைசி பந்தில் நிரோஷன் திக்வெல்ல மிக இலகுவான ரன் அவுட் ஒன்றினை தவரவிட்டதால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் லசித் மாலிங்க பந்து வீச தென் ஆபிரிக்கா அணி சார்பில் மில்லர் மற்றும் வெண்டேர்சன் துடுப்பெடுத்தாடி 14 ஓட்டங்களை பெற்றனர். வெற்றி இலக்கான 15 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச திசர பெரேரா மற்றும் அவிஷ்க பெர்ணாண்டொ ஜோடியினால் 5 ஓட்டங்கள் மாத்திரம் பெற முடிந்தது. இதனடிப்படையில் இலங்கை அணி தோல்வியினை தழுவியது.
இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி இரவு 09:30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

