மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் மூலமாகவே கூடுதலான அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
நாட்டுக்கு வருமானம் பெற்றுத் தருபவர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமையாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கு தொழில்துறை அறிவையும் முறையான கல்வி வசதிகளையும் பெற்றுக்கொடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் கூடுதலான சம்பளத்தை ஈட்டலாம். இது பொருளாதார அபிவிருத்தி நடைமுறையை வலுப்படுத்தும்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு செல்பவர்களுக்கு ஜப்பானில் தொழில் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜப்பானிற்கு பயிற்சி வழங்கப்பட்ட பணியாளர்களே அனுப்ப முடியும். அதற்கமைய பயிற்சி வழங்குதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு துறைசார் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையர்கள் முறையான தகைமைகளுடனும், பயிற்சிகளுடனும் வெளிநாடுகளில் வேலை செய்வது அவசியம் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் தமது பிள்ளைகளோடு இணையத்தின் வாயிலாக இலவசமாக பேசுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். மிகவும் குறைந்த கட்டணத்தில் சிம் அட்டைகளை விநியோகிப்பது பற்றி செல்போன் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .