சட்டவிரோதமாக இறக்குமதி செய்து உதிரிபாகங்களை இணைத்து பொருத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிசொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவருடைய தனிப்பட்ட செயலாளருடையது என ரத்வத்தே தம்பதிகள் கூறினாலும், அந்த வாகனம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடையது என்பது தெளிவாகிறது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் இருக்கிறார். அவர், அந்த வாகனத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்து இருக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளது.
மிரிஹான, அமுதேனிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி சொகுசு வீட்டில் சந்தேகத்திற்கிடமான இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக கடந்த மாதம் 25ஆம் திகதி மிரிஹான தலைமையக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கார் நிறுத்தப்பட்டிருப்பது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான திருமதி ராஷி பாபா ரத்வத்தவின் வீடு என்பது தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் அவரது தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்த பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ பஸ்நாயக்க? கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தமக்கு தெரிவித்துவிட்டு காரை தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்து கடந்த 26ஆம் திகதி குறித்த காரை காவலில் எடுத்துக்கொண்டனர். அப்போது இருந்தே ரத்வத்த குடும்பத்தினர் மாயமாயினர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கார் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தமையும், அவ்வேளையில், காரின் பதிவு இலக்கமும் கண்டறியப்பட்டுள்ளது. KY-6864 என்ற இலக்கமே அந்த காரில் பொருத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்தது
மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் இராஜாங்க அமைச்சரின் முன்னாள் மனைவியின் காரில் எழுதப்பட்டிருந்த இலக்கமே இந்த காரின் இலக்கம் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கார் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பாபா ரத்வத்த, நுகேகொடை கங்கொடவில பிரதான நீதவான் ருவினி ஜயவர்தனவின் உத்தரவின் பேரில், எதிர்வரும் 7ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.