வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியாதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச் வெளியேறிச் சென்ற நிலையில், ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று வங்கதேச தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து சூறையாடினர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்து டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து கையில் சிக்குவதை எடுத்துக்கொண்டும், சிலர் கோப்புகளை கிழித்தனர்.
கைகளில் தடிகளுடன் அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஆட்டுக்குட்டி, முயல், வாத்து என்று கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. சிலர், பிரதமரின் நாற்காலியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர்.
இன்னும் சிலர் அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டனர். சிலர் பாத்திரங்கள், மேசை விரிப்புகளை எடுத்துச் சென்றனர். இன்னும் சிலர் அங்கிருக்கும் புல்வெளி, அழகான இடங்கள் முன் புகைப்படம் எடுத்தனர். போராட்டக்காரர்களின் செயல்கள் புகைப்படங்கள், வீடியோக்களாக வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.