பேருந்தில் பயணித்த பேருந்து சாரதி உட்பட ஐவர் காயமடைந்து லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (02) காலை 8.00 மணியளவில் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை மட்டுக்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, கொழும்பில் இருந்து அம்பேவெல அரச கால்நடை பண்ணைக்கு சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் தனியார் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பெய்து வரும் மழையினால் வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதால், ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும், மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.