ஓமான் கடற்பிராந்தியத்தில் 'Prestige Falcon' எனும் எண்ணெய் தாங்கிக் கப்பல் மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 9 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் எஞ்சிய 8 பேரும் இந்திய பிரஜைகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS டெக் யுத்த கப்பல் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனோரை மீட்பதற்காக இந்திய கடற்படையின் P 81 ரக விமானமும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஓமான் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் இலங்கையர்கள் மூவர் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயிருந்தனர்.
கொமொரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த குறித்த கப்பல், யேமன் துறைமுகமான ஏடனிலிருந்து ஓமானின் முக்கிய தொழில்துறை துறைமுகமான டுக்மில் பகுதியில் வைத்து கவிழ்ந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.
ஓமான் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்பு கொண்டு காணாமல் போன 3 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.