முட்டாள் தனமான தீர்மானங்களை எடுத்து நடந்து கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த பிரபஞ்சம் திட்டமானது நாட்டில் படித்தவர்களை உருவாக்கி, கல்வியை பலப்படுத்தி, கற்றறிந்தோர் தலைமுறையை உருவாக்க வழிகோலுகிறது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எட்டும் மனப்பாங்கு மாற்றம் இதனால் விருத்தியடையும். நாட்டில் கல்வியறிவு பெற்ற சமூகம் உருவாக வேண்டும். கற்றறியாதோர் சமூகத்தில் கற்றறியா ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அறிவை அடிப்படையாகக் கொண்டமையாத தீர்மானங்களை எடுப்பர். இத்தகையவர் எடுத்த முட்டாள்தனமான தீர்மானங்களை நம்மக்கள் இன்று அனுபவித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் இலக்கு வைத்து நாட்டின் ஆட்சியாளர்கள் எடுக்கும் கீழ்த்தரமான முடிவுகளால் குறிப்பிட்டதொரு சமூகத்தினர் பாதிக்கப்பட்டனர். அண்மையில் இதற்கு ஆட்சியாளர்கள் மன்னிப்பும் கேட்டனர். நல்ல விடயம் தான். ஆனால் ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் குறிவைத்து எடுக்கப்பட்ட அர்த்தமற்ற முடிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு, வலுக்கட்டாயமாக தகனம் செய்த கீழ்த்தரமான செயலுக்கான இழப்பீட்டை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லையோல் இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன். முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் சமூகம் இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும் குடிமக்களை உருவாக்காது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறேன். இஸ்ரேலும் பாலஸ்தீனும் நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இழிவான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மனித நேயத்திற்கு முதலிடம் வழங்க வேண்டும். அதன் மூலம் உலக சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 383 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன களுத்துறை, பாணந்துறை, ஜீலான் மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி இடம்பெற்றது. இந்ழிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.