கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 21 வயதான குறித்த யுவதி செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 08ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த போது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாடகி கே. சுஜிவா மற்றும் நான்கு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 06 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (20) கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மேலதிக விசாரணைகளுக்காக அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.