மில்லியன் கணக்கான ரூபா நிதி மோசடி காரணமாக அதுருகிரிய இடைமாற்றில் 22 காசாளர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கையின்படி, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதுருகிரிய இன்டர்சேஞ்சில் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் பிரியந்த சூரியபண்டார தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகத்தினால் அதுருகிரிய இடைமாற்றின் காசாளர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி இந்த பாரிய நிதி மோசடி ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின் இணைப்பைத் துண்டிப்பதன் மூலமோ அல்லது மின் விநியோக கம்பியை இரகசியமாக அகற்றுவதன் மூலமோ நிதி மோசடி பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.
சிசிடிவி கேமராக்கள் செயல்படாதபடி காசாளர்கள் மின்சாரத்தை நிறுத்தியதாகவும், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அத்துருகிரிய இடைமாற்றில் பணிபுரிந்த 27 காசாளர்களில் 22 பேர் மேற்படி நிதி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து செயலிழந்ததால், கிட்டத்தட்ட 2 மில்லியன் ரூபாய் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.