கலையுடன் கூடிய ஹோட்டலாக மாறும் கண்டி போகம்பர சிறைச்சாலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கலையுடன் கூடிய ஹோட்டலாக மாறும் கண்டி போகம்பர சிறைச்சாலை!


போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன்வந்திருக்கிறார். இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


போகம்பர சிறைச்சாலை 2014ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. 


மேலும், அந்த அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 


சிறைச்சாலையின் பிரதான கட்டடம் காலனித்துவ கட்டடக்கலையை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கு திறந்த மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் வளாகத்தின் பொருளாதார மதிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர்  இ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க தெரிவித்தார்.


தற்போதும் சிறைச்சுவர் மற்றும் பிரதான கட்டடம் தவிர மற்ற பகுதிகளின் அபிவிருத்திக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. 


2018ஆம் ஆண்டு வரை நகர அபிவிருத்தி அதிகார சபையானது சிறைச்சாலையின் முன்பகுதியை நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய கட்டடத்துடன் கூடிய பூங்காவாக உருவாக்கியுள்ளது.


சிறைச்சாலையின் பிரதான வர்த்தகத் தொகுதி, உணவுக்கூடம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உள்ளிட்ட வர்த்தகக் கட்டடமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 


போகம்பர சிறைச்சாலை வளாகத்தின் கட்டடக்கலை மற்றும் வரலாற்று விழுமியங்களைப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார். 


இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை முதலீட்டு சபையும் இணைந்து தனியார் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளன. இது தவிர முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


போகம்பர சிறைச்சாலை 138 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் பல்லேகலையில் உள்ள புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது. 


போகம்பர சிறைச்சாலை தற்போது பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.


போகம்பர சிறைச்சாலை கட்டப்படுவதற்கு முன்னர், இலங்கை பிரித்தானியர்களின் காலனியாக மாறிய பின்னர், தற்போதைய கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள ஹெங்மேன்ஸ் ஹில் (Hangmans Hill) என்ற மலைப்பாதையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 


1876ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போகம்பறை ஏரியை நிரப்பி சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது. 


அரசாங்க திணைக்களத்தின் மூலம் அப்போது சிறைச்சாலை மற்றும் காவல் துறையின் பிரதான ஆணையாளராக இருந்த என்.ஆர். சோண்டர்ஸின் மேற்பார்வையில் இருந்தது. இந்த சிறைச்சாலை 92 கைதிகளின் உழைப்பில் 4  இலட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்டுள்ளது.


இந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு சிறைச்சாலைகளில் போகம்பறர சிறைச்சாலையும் ஒன்று. பரப்பளவு மற்றும் பாதுகாப்பில் இலங்கையின் இரண்டாவது இடத்தில் இருக்கும் போகம்பர சிறைச்சாலையில் ஒரே நேரத்தில் மூவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம். 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கிலாந்து எடிம்பரோ ராணி விக்டோரியாவின் கிரீடத்தின் வடிவில், பிரான்சின் பரிஸ் பஸ்டில் கோட்டையைப் போன்றே கட்டப்பட்டது. இது 556 அடி நீளமும், 144 அடி அகலமும், 102 அடி உயரமும் கொண்டது. 


இது 408 கைதிகளுக்குப் போதுமான 1080 கன அடி (10×12×9) கொண்ட 328 அறைகளைக் கொண்டுள்ளது. 


போகம்பர சிறைச்சாலை ஒரு கட்டடக்கலை அடையாளமாகும். இது ஆசியாவிலேயே மிக நீளமான கட்டடமாகும். இங்கு 1876 முதல் 1975 வரை 524 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


1975ஆம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் நாட்டையே உலுக்கிய முப்பதாவது கொலைக் குற்றவாளிகளான டபிள்யூ.ஜி.ரிச்சர்ட் மற்றும் டி.எம்.ஜயவர்தன ஆகிய இரு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர், போகம்பர சிறைச்சாலையில் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.


எஹலேபொல குமாரிஹாமி நீரில் மூழ்கி சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடமும் இந்த சிறை வளாகத்திலேயே உள்ளது. 


மேலும், உத்துவன்கன்தே சரதியல், மரு சிரா, கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி சில்வா போன்ற பிரபலங்களும் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.


இதே போன்று உதுவன்கன்தே சரதியல், மரு சிறா போன்றவர்களும் கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி. சில்வா போன்ற பிரபல்யமான மனிதர்களும் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சிறைச்சாலையாக செயற்படுகின்ற காலத்தில் அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, புளொக் கல் உற்பத்தி, பூ வளர்த்தல், சவர்க்காரம் செய்தல் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில்களும் அங்கு சிறைச்சாலையின் நலன்புரிப் பிரிவால் இங்கு செயற்படுத்தப்பட்டிருந்தன. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.