பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் ஆகியோர் வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான ஊடக விவாதத்தின் போது முரண்பாட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதம பீடாதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சமூகத்தில் இடம்பெறும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளை எச்சரிக்க ஞானசார தேரர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகள் அரச பாதுகாப்புப் படைகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்கியதாகவும், இலங்கையில் சில தீவிரவாதக் குழுக்கள் பரவுவதைத் தடுக்க உதவியதாகவும், இதன் விளைவாக, இலங்கை சமூகத்தில் பல சாத்தியமான தீவிரவாத மோதல்கள் தவிர்க்கப்பட்டதாக அவர்கள் குறித்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளனர்.