17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவன் நுகேகொட பிரதேசத்தில் உள்ள பிரத்தியேக வகுப்பொன்றிக்கு சென்று கொண்டிருந்த போது, மத்தேகொட, குடமாதுவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவன் அடிக்கடி மருந்து வகைகளை உட்கொள்வதை அறிந்த மாணவி அது தொடர்பில் வினவிய போது மாணவனுக்கு தீராத நோய் ஒன்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த மாணவி அவர்களின் காதல் உறவை முறித்துக்கொண்டு வேறொரு இளைஞனுடன் காதலை வளர்த்துக்கொண்டுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவன், குறித்த இருவரும் காதல் உறவில் இருந்த போது, வீடியோ அழைப்புகள் மூலம் ஸ்கிரீன் ஷாட் செய்யப்பட்ட மாணவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மாணவியின் நண்பர்கள் சிலர் இந்த புகைப்படங்களை பார்த்து சம்பந்தப்பட்ட மாணவிக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.