முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கான விசா அடங்கிய காலாவதியான கடவுச்சீட்டை வழங்கியுள்ளதாகவும், ஆனால் கடவுச்சீட்டின் நிலை குறித்து விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெற்று மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முதன்முறையாக காலாவதியான கடவுச்சீட்டுடன் எம்.பி வந்த போது விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்ய தவறியதாகவும், அதற்கு பதிலாக புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் வந்த போது அவரை கைது செய்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்சவின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
பழைய கடவுச்சீட்டில் செல்லுபடியாகும் வீசாவைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் பயணிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை வழக்கில் இருந்து விடுவித்தது. (யாழ் நியூஸ்)