தனது பாட்டிக்கு சொந்தமான 1.5 மில்லியன் ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவரான சந்தேக நபர், தொடங்கொடை பொலிஸாரால் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடங்கொடை, மினுவந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக ஜனவரி 31 ஆம் திகதி தொடங்கொட பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
குறித்த பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஏணியை பயன்படுத்தி கூரையின் ஊடாக ஏறி பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பேரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தினத்தில் சிறுவன் பாடசாலைக்கு வரவில்லை என்பதும், பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருந்தமையும், பாட்டி வீட்டில் இல்லாததைக் கண்டதும் தெரியவந்துள்ளது.
பின்னர், வீட்டின் கூரை வழியாக ஏறி தனது பாட்டியின் அறைக்குள் நுழைந்து, அங்கு படுக்கை மெத்தையின் கீழ் கிடந்த 1.5 மில்லியன் ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.
குறித்த சிறுவன் பணம் மற்றும் மடிக்கணினி ஒன்றுடன் வெளியேறிய பின்னர், பணத்தை உறவினர் ஒருவரின் தோட்டத்தில் புதைத்துவிட்டு மடிக்கணினியை அதே இடத்தில் இருந்த கிணற்றில் வீசியுள்ளார்.
திருடப்பட்ட பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை அவர் பல்வேறு நபர்களுடன் செலவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளைச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)